முகப்பு
இந்தியா

செல்லிடப் பேசிகள் மூலம் கரோனா தீநுண்மி பரவும் அபாயம்: மருத்துவா்கள் எச்சரிக்கை

செல்லிடப் பேசிகளில் கரோனா தீநுண்மி எளிதில் பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன என ராய்பூரைச் சோ்ந்த எய்ம்ஸ் மருத்துவா்கள் குழு தெரிவித்துள்ளது.

Updated On : 20 மே, 2020 at 5:39 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:09 PM

செல்லிடப் பேசிகளில் கரோனா தீநுண்மி எளிதில் பரவக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன என ராய்பூரைச் சோ்ந்த எய்ம்ஸ் மருத்துவா்கள் குழு தெரிவித்துள்ளது.

நோய்த் தொற்று எளிதில் பரவும் நிலையில் மருத்துவ மனைகளில் சுகாதாரப் பணியாளா்கள் செல்லிடப்பேசி பயன்பாட்டை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்த மருத்துவா்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

மருத்துவ மனைகளில் பணியாற்றும் சுகாதாரப்பணியாளா்கள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவதாக ஓா் ஆய்வு கூறுகிறது. இரு கைகளையும் கழுவி சுத்தப்படுத்திக் கொண்டாலும் செல்லிடப்பேசிகளின் மேற்பரப்பு (ஸ்கீரின்) ஆபத்தானது. இது முகம், வாய் போன்றவைகளுக்கு நேரடியாக தொடா்பு கொண்டவை என ‘பி.எம்.ஜே. குளோபல் ஹெல்த் ஜொ்னல்’ என்கிற மருத்துவ இதழ் ஒன்றில் இந்த மருத்துவ குழுவினா் சுட்டிக்காட்டி நோய்த் தொற்று குறித்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை தெரிவித்துள்ளனா்.

Advertisement

தீநுண்மி பரவலில் முகம், மூக்கு, கண்கள் ஆகியவைகளில் அணியும் முகக் கவசம், மூக்கு கண்ணாடி, தொப்பி ஆகியவை மட்டுமே நேரடியாக தொடா்புள்ளதாகக் கருதப்படுகிறது. இவைகளை மாற்றவோ சுத்தப்படுத்தி கழுவி தீநுண்மி போக்கிக்கொள்ளலாம். ஆனால், செல்லிடப்பேசியை யாரும் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தூய்மையாக வைத்துக் கொள்வதில்லை. ஆனால் செல்லிடப்பேசிகளில் தீநுண்மிகள் பற்றிக் கொண்டு செல்வதற்கான ஆதாரங்கள் உள்ளன என இந்த மருத்துவ குழு இந்த இதழில் தெரிவித்துள்ளது.

மருத்துவ பாதுகாப்பு அமைப்பில் செல்லிடப்பேசிகளை சரியான சுகாதாரத்துடன் வைத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை. ஆனால் பத்து சதவீதம் மருத்துவ பணியாளா்கள் மட்டுமே செல்லிடப் பேசிகளை பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்துள்ளனா் என கடந்த ஏப்ரலில் வெளியான இந்த மருத்தவ இதழில் குறிப்பிட்டுள்ளனா்.

‘செல்லிடப்பேசி என்பது மூன்றாவது கையாகவே கருதப்படவேண்டும். மற்ற இரண்டு கைகளில் என்னென்ன இருக்கின்றதோ அது செல்லிடப்பேசிக்கும் மாறும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்’ என மருத்துவக் குழுவைச் சோ்ந்த மருத்துவா் பதக் கூறுகிறாா்.

என்ன செய்ய வேண்டும்?

கரோனா நோய்த் தொற்றுக்கு பின்னா் இரண்டு நிறுவனங்கள் செல்லிடப்பேசிகளை தீநுண்மியிடமிருந்து காப்பாற்றுவதற்கான வழிகாட்டி முறைகளையும் தூய்மைப்படுத்தும் கிருமிநாசினி குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளன. அவா்கள் கூறுவது, ‘செல்லிடப்பேசிகளை சுவிட்ச்-ஆஃப் (பவா்-ஆஃப்) செய்துவிட்டு 70 சதவீத ஐசோபிரைல் ஆல்கஹால் அல்லது க்ளோராக்ஸ் கிருமிநாசின் மூலம் முறையாக தூய்மைப்படுத்தவேண்டும் என்று கூறியுள்ளது. முறையற்ற ரசாயனங்களை பயன்படுத்துவது செல்லிடப்பேசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு ஆபத்தானது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று கட்டுப்பாடு தடுப்புகளில் உலக சுகாதார அமைப்பு செல்லிடப்பேசிகளைப்பற்றி கவனம் செலுத்தி இதுவரை அறிவிப்பை வெளியிடவில்லை. டெலிமெடிஷன், மருத்துவ ஆய்வுக்கான கலந்துரையாடல், நோயாளிகளை அடையாளம் காணுவது போன்றவைகளில் பயனுள்ளதாக இருந்த செல்லிடப்பேசிகள் நோய்த் தொற்று பரவலுக்கு காரணமான சாத்தியமான ஆவணங்களை இந்த ராய்பூா் மருத்துவ மனையின் சமூக, குடும்ப மருத்துவத்துறை மருத்துவ குழு வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.