பொதுமுடக்கத்தின் போது வீணான 1,550 டன் உணவு தானியங்கள்
பொதுமுடக்கம் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பசியாலும், பட்டினியாலும் உயிரிழந்து கொண்டிருந்த அதேக் காலக்கட்டத்தில், இந்திய உணவுபொருள் கழகத்தின் கிடங்குகளில் 1,550 டன் உணவு தானியங்கள் வீணாகியுள்
புது தில்லி: பொதுமுடக்கம் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் பசியாலும், பட்டினியாலும் உயிரிழந்து கொண்டிருந்த அதேக் காலக்கட்டத்தில், இந்திய உணவுபொருள் கழகத்தின் கிடங்குகளில் 1,550 டன் உணவு தானியங்கள் வீணாகியுள்ளன.
இது குறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில், கடந்த மே மாதம் சுமார் 26 டன் உணவு தானியங்கள் வீணாகியதாகவும், ஜூன் மாதத்தில் மட்டும் வீணான உணவு தானியங்களின் அளவு 1,453 டன்களாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வீணான உணவு தானியங்களின் அளவு 41 மற்றும் 51 டன்களாக இருந்துள்ளது. அதே புள்ளிவிவரத்தில், கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மட்டும் வீணான உணவு தானியத்தின் அளவு பூஜ்யமாக இருந்துள்ளது.
ஏப்ரல் - ஜூன் மாத காலத்தில் இந்திய உணவுபொருள் கழகத்தின் கிடங்குகளில் வீணான தானியத்தின் அளவு மிக மிக அதிகமாக உள்ளது.
அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தகவலில், வழக்கமாக இந்திய உணவு பொருள் கழகத்தில் உள்ள கிடங்குகளில் அறிவியல் பூர்வமாகவே தானியங்கள் பாதுகாக்கப்படும். அங்கு பூச்சி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பதப்படுத்தும் பணிகள் நடைபெறும்.
அதே வேளையில், இயற்கை பேரிடர்கள், போக்குவரத்தின் போது சில உணவுதானியங்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு வீணாகும். ஆனால், குறிப்பிட்ட அளவுக்கு தானியங்கள் வீணாகும் போது உடனடியாக அது கவனத்தில் கொள்ளப்பட்டு, அதனைத் தடுக்க எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும். கடந்த 2014-18-ஆம் ஆண்டுகளில் மட்டும் 125 அதிகாரிகள் கேள்விக்குள்படுத்தப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய திருநாட்டில், பொதுமுடக்கம் காரணமாக பல ஏழைக் குடும்பங்கள் உண்ண உணவின்றி உழன்றுகொண்டிருந்த அதே வேளையில், கிடங்குகளில் புழுக்களும் பூச்சிகளும் 1,550 டன் உணவு தானியங்களை உண்டு கொழுத்துள்ளன என்ற செய்தி, உணவின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் காதுகளில் எட்டாமல் இருத்தலே நலம்.