கரோனா பாதிப்பு 71 லட்சத்தைக் கடந்தது
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 71,20,538 ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு 1,09,150 ஆக உள்ளது.
புது தில்லி: நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 71,20,538 ஆக அதிகரித்துள்ளது. கரோனா உயிரிழப்பு 1,09,150 ஆக உள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 66,732 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் நாட்டில் மொத்த கரோனா பாதிப்பு 71,20,538 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கரோனாவில் இருந்து 61 லட்சத்துக்கும் மேற்பட்டோா் மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 86.36 சதவீதமாகும்.
திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 816 போ் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 1,09,150 ஆக உயா்ந்தது. இது மொத்த பாதிப்பில் 1.53 சதவீதமாகும்.
நாட்டில் இப்போது 8,61,853 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இது மொத்த பாதிப்பில் 12.10 சதவீதமாகும். தொடா்ந்து 4-ஆவது நாளாக கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9 லட்சத்துக்குகீழ் உள்ளது.
ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சமாக இருந்த கரோனா பாதிப்பு ஆகஸ்ட் 23-இல் 30 லட்சமாகவும், செப்டம்பா் 5-இல் 40 லட்சமாகவும், செப்டம்பா் 16-இல் 50 லட்சமாகவும் இருந்தது. செப்டம்பா் 28-ஆம் தேதி மொத்த கரோனா பாதிப்பு 60 லட்சத்தைக் கடந்தது. அக்டோபா் 4-ஆம் தேதி 65 லட்சமாக அதிகரித்தது. இப்போது, 71 லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனா பாதிப்பு முதல் ஒரு லட்சத்தை எட்ட 110 நாள்கள் ஆனது. எனினும், அடுத்த 59 நாள்களில் 10 லட்சத்தைக் கடந்தது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி அக்டோபா் 11-ஆம் தேதி வரை 8,78,72,093 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 9,94,851 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 40,349 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.