தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமா?
தவெக தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள்..
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுவது என முடிவெடுத்திருக்கும் தவெக, 234 தொகுதிகளிலும் களமிறங்கவிருக்கிறது.
வேட்பாளர் அறிமுகக் கூட்டம் வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடும்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது அவர் மற்றொரு தொகுதியிலும் போட்டியிட ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியோடு சேர்த்து திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட பரிசீலிக்கப்பட்டு வந்ததாகவும், ஆனால், அந்த முடிவு தற்போது நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சிறுபான்மையின மக்கள் அதிகம் வாழும் தொகுதிகள் மற்றும் பல்வேறு சமூக மக்கள், தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதிகளாகத் தெரிவு செய்து தவெக தலைவர் போட்டியிட சாதகமான ஒரு தொகுதியை கட்சி நிர்வாகம் ஆலோசித்து வந்தது. அதில் முதல் தெரிவாக பெரம்பூர் இருந்து வருகிறது. இரண்டாவது திருச்சி கிழக்கு இருக்கிறது.
பெரம்பூரில் தவெக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டபோதே திருச்சி கிழக்கு தொகுதியிலும் அதே தீவிரம் இருந்தது. ஆனால் ஒரு சில நாள்களாக அந்த முடிவில் மாற்றம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதலில், அதிமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகிவிட்டன. அடுத்து திமுக இன்னமும் தொகுதி விவரங்களை வெளியிடவில்லை. ஒருவேளை திமுக திருச்சி கிழக்கு தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டால், கண்டிப்பாக விஜய் அங்கு போட்டியிடும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பெரம்பூர் தொகுதியை அதிமுக, கூட்டணியில் உள்ள பாமகவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. விட்டுக் கொடுத்துள்ளதோ, தட்டிக்கழித்திருக்கிறதோ.. தற்போது திமுக என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொருத்து தவெக அறிவிப்பில் மாற்றங்கள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.
ஒருவேளை, திமுக, பெரம்பூர் தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்துவிட்டால், விஜய் பெரம்பூரில் எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று கட்சித் தலைமை கருதுகிறது. திருச்சி கிழக்கு போட்டியை தவிர்த்துவிடலாம் என்றும் முடிவெடுக்கலாம். ஒருவேளை, திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக பலமான வேட்பாளரை நிறுத்தினாலும், விஜய் அங்கு போட்டியிடுவதை கைவிடலாம். ஏற்கனவே, அங்கு போட்டியிட ஒரு முக்கிய புள்ளியை தவெக தெரிவு செய்து வைத்திருப்பதாகவே கூறப்படுகிறது.
பெரம்பூரில் ஏற்கனவே, வீடு வீடாக சென்று தவெகவினர் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். திமுகவும், பெரம்பூரை கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்க விரும்பவில்லை, கோட்டையைத் தக்க வைக்க பாடுபட வேண்டும் என்றே கருதுவதாகவும் கூறப்படுகிறது. பெரம்பூரை திமுக கூட்டணிக்கு விட்டுக் கொடுக்கக் கூடாது என்றே அப்பகுதி திமுகவினர் வலியுறுத்துகிறார்கள். பெரம்பூர் முதல் விருகம்பாக்கம் வரை விஜய் பிரசாரம் செய்ய திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.