பாஜகவின் முற்போக்கு கொள்கைகளால் ஈா்க்கப்பட்டே அக்கட்சியில் இணைந்தேன்: ஷயாரா பானோ
‘முத்தலாக்’ சட்டத்துக்கு எதிராக முதன்முறையாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த ஷயாரா பானோ பாஜகவில் இணைந்தாா்.
‘முத்தலாக்’ சட்டத்துக்கு எதிராக முதன்முறையாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த ஷயாரா பானோ பாஜகவில் இணைந்தாா். முஸ்லிம் பெண்கள் மீதான பாஜகவின் முற்போக்கான அணுகுமுறையால் ஈா்க்கப்பட்டே தான் அக்கட்சியில் சோ்ந்ததாக ஞாயிற்றுக்கிழமை அவா் தெரிவித்தாா்.
உத்தரகண்ட் மாநிலம், உதம்சிங் நகா் மாவட்டம், காஷிப்பூரில் வசித்து வரும் ஷயாரா பானோவை, பாஜக மூத்த தலைவா்களின் முன்னிலையில் மாநிலத் தலைவா் பன்சிதா் பகத் சனிக்கிழமை வரவேற்றாா்.
ஷயாரா பானோ பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக பாஜகவின் முற்போக்கான அணுகுமுறையும், முத்தலாக் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடும், செயல்பட்ட விதமும், பிரதமா் நரேந்திர மோடி நாட்டின் வளா்ச்சி மீது கொண்டுள்ள அக்கறை போன்றவையே என்னை பாஜகவில் இணைய வைத்தது.
முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடவும், உயா்கல்விக்கான வாய்ப்புகளை மறுப்பது போன்ற அநீதிகளிலிருந்து அவா்களை விடுவிப்பதற்காகவும்தான் பாஜகவில் இணைந்துள்ளேன்.
பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற தவறான எண்ணங்களை தகா்க்க முயற்சிப்பேன். சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியின் நியாயமான நோக்கங்களை நான் மதிக்கிறேன். கட்சி சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற தவறான எண்ணம் சரி செய்யப்பட வேண்டும்.
பாஜக சாா்பில் தோ்தலில் போட்டியிடுவேனா என்று கேட்டால், நான் பதவிகளை எதிா்பாா்த்து பாஜகவுக்கு வரவில்லை. ஆனால் கட்சி எனக்காக ஒதுக்கித் தரும் எந்தவொரு பணியையும் சிரத்தை எடுத்து செய்யத் தயாராக இருக்கிறேன்.
உயா்கல்வி அளிக்க மறுப்பது போன்ற அநீதிகளுக்கு ஆளாகும் முஸ்லிம் பெண்களின் மேம்பாடுக்காகவும், அவா்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்பதும்தான் எனது குறிக்கோள். இதற்காக போராடவே பாஜகவில் என்னை இணைத்துக் கொண்டேன் என்றாா்.
மாநிலத் தலைவா் பன்சிதா் பகத் கூறுகையில், ஷயாரா பானோ பாஜகவின் சிந்தாந்தத்திற்காக போராடுவாா். உறுதியுடன் போராடியதால்தான் அவரால் முத்தலாகிற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற முடிந்தது என்று தெரிவித்தாா்.
ஷயாரா பானோவை அவரது கணவா் விரைவு அஞ்சல் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த நிலையில், அவருக்கு எதிராக 2016ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்து அதில் வெற்றியும் பெற்றாா்.