எருமைக்கு சொந்தம் கொண்டாடிய இருவர்; எளிதாகக் கண்டுபிடித்த உ.பி. காவல்துறை
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜில் ஒரு எருமைக்கு இரண்டு பேர் சொந்தம் கொண்டாடிய நிலையில், மிக எளிதாக இந்த வழக்கை முடித்துவைத்தது உ.பி. காவல்துறை.
கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜில் ஒரு எருமைக்கு இரண்டு பேர் சொந்தம் கொண்டாடிய நிலையில், மிக எளிதாக இந்த வழக்கை முடித்துவைத்தது உ.பி. காவல்துறை.
விரேந்திரா மற்றும் தர்மேந்திரா இருவரும் உத்தரப்பிரதேசத்தின் வெவ்வேறு கிராமங்களில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில், காவல்நிலையத்துக்கு வந்த விரேந்திரா, தனது எருமையை தர்மேந்திரா திருடி, முஸ்லிம் நபருக்கு விற்று விட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அதாவது, கால்நடைச் சந்தையில் முஸ்லிம் நபர் ஒரு எருமையை விற்பனைக்கு வைத்திருந்ததாகவும், அதைப் பார்த்த விரேந்திரா, அந்த எருமை தனது என்று வாதிட்டுள்ளார். அப்போதுதான், அந்த எருமை மாட்டை தான் தர்மேந்திரா என்பவரிடம் இருந்து வாங்கியதாக, எருமையை வைத்திருந்தவர் கூறியுள்ளார். இதையடுத்து காவல்நிலையத்துக்கு வந்த விரேந்திரா, தர்மேந்திரா மீது புகார் அளித்தார்.
காவல்நிலையத்துக்கு வந்த தர்மேந்திரா, எருமை மாடு தன்னுடையதுதான் என்றும், அதை முஸ்லிம் நபருக்கு ரூ.19 ஆயிரத்துக்கு விற்றதாகவும் கூறினார். இதனால் இருவரையும் காவல்நிலையத்துக்கு வரவழைத்த காவலர்கள், சம்பந்தப்பட்ட எருமைமாட்டை, இருவரையும் தனித்தனியே அழைக்குமாறு கூறினார்.
அப்போது தர்மேந்திரா எருமையை அழைத்ததும், அதுவும் பதிலுக்கு குரல் கொடுத்தது. ஆனால் விரேந்திரா அழைத்தபோது எருமை எந்த பதிலும் கொடுக்காமல் சும்மா நின்றது. இதை வைத்து எருமை தர்மேந்திராவுக்குச் சொந்தமானது என்று கண்டுபிடித்த காவல்துறையினர், பொய்க் புகார் கொடுக்க முயன்ற விரேந்திராவை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.