தெலங்கானாவில் அதிகரித்த குழந்தைத் திருமணம்
கரோனா காரணமாக மத்திய, மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, தெலங்கானாவில் குழந்தைகள் திருமணம் அதிகரித்துள்ளது.
ஹைதராபாத்: கரோனா காரணமாக மத்திய, மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, தெலங்கானாவில் குழந்தைகள் திருமணம் அதிகரித்துள்ளது.
மாநில மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத் துறை இது குறித்து வெளியிட்டிருக்கும் தகவலில், கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் குழந்தைகள் நலத்துறை அமைப்பினர் 597 குழந்தைகளை (425 குழந்தைத் திருமணம், 147 குழந்தை தொழிலாளர்) மீட்டுள்ளனர்.
வழக்கமாக குழந்தைகள் திருமணம் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறையில் இருந்து மீட்பு நடவடிக்கைகள் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக விகாராபாத், வாரங்கள், மஹபூப்நகர் மாவட்டங்களில் குழந்தைத் திருமணம் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கியக் காரணமாக, பொது முடக்கக் காலத்தில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் குழந்தைகள் காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வந்த சிறார்கள், அவர்களது குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அதாவது சுமார் 13 ஆயிரம் சிறார்களில் 9 ஆயிரம் சிறார்கள் அவர்களது குடும்பத்தினரிடம் திருப்பி அனுப்பப்பட்டனர். இதன் காரணமாகவே குழந்தைகள் திருமணமும், குழந்தைத் தொழிலாளர் முறையும் அதிகரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.