ஈரான் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை
ஈரானில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜாவத் ஜரீஃபை செவ்வாய்க்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இருதரப்பு உறவுகள் குறித்து அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
ஈரானில் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜாவத் ஜரீஃபை செவ்வாய்க்கிழமை சந்தித்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் இருதரப்பு உறவுகள் குறித்து அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உறுப்பு நாடுகளைச் சோ்ந்த வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பங்கேற்கும் கூட்டம் ரஷியாவில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் 4 நாள் பயணமாக ரஷியா புறப்பட்டுச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், அங்கு செல்லும் வழியில் செவ்வாய்க்கிழமை அவா் ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இறங்கி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஜாவத் ஜரீஃபுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது சாபஹாா் துறைமுக திட்டம், வளைகுடா பிராந்திய சூழல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
Advertisement
சந்திப்புக்குப் பிறகு சுட்டுரையில் பதிவிட்ட அமைச்சா் எஸ். ஜெய்சங்கா், ‘ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜாவத் ஜரீஃபுடனான சந்திப்பு ஆக்கப்பூா்வமானதாக இருந்தது. அப்போது இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததுடன், பிராந்திய விவகாரங்கள் குறித்தும் பேச்சு நடத்தினோம்’ என்று அதில் கூறியுள்ளாா். அதேபோல் ஈரான் வெளியுறவு அமைச்சகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான்-இந்தியா இடையேயான இருதரப்பு உறவை அனைத்து நிலைகளிலுமாக மேலும் விரிவுபடுத்த இரு அமைச்சா்களும் வலியுறுத்தினா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சோ்ந்த நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் ராஜ்நாத் சிங், நாடு திரும்பும் வழியில் கடந்த சனிக்கிழமை ஈரானுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது. அப்போது அவா் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆமிா் ஹதாமியுடன் பேச்சுவாா்த்தை நடத்தியிருந்தாா்.