முகப்பு
இந்தியா

தீபக் கோச்சாருக்கு கரோனா தொற்று

ஐசிஐசிஐ கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு அமலாக்கத் துறை காவலில் உள்ள தீபக் கோச்சாருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 4:36 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM


ஐசிஐசிஐ கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு அமலாக்கத் துறை காவலில் உள்ள தீபக் கோச்சாருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ கடன் மோசடி வழக்கில், வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் கடந்த 7-ம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை செப்டம்பர் 19-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க மும்பை நீதிமன்றம் 8-ம் தேதி அனுமதியளித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, அமலாக்கத் துறையினர் அவரை மும்பையிலிருந்து தில்லி கொண்டு வந்தனர். எனினும், வழக்கறிஞரைச் சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

Advertisement

இந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீபக் கோச்சாருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்த வழக்கறிஞர் விஜய் அகர்வால் தனிமைப்படுத்தியுள்ளார்.

ஐசிஐசிஐ கடன் மோசடி வழக்கு விவரம்:

சந்தா கோச்சார், ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தபோது, வங்கி விதிமுறைகளை மீறி, விடியோகான் குழுமத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கினார். அதற்குப் பிரதிபலனாக, சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாருக்குச் சொந்தமான நியூபவர் ரின்யூவபிள்ஸ் நிறுவனத்தில், விடியோகான் குழுமம் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, விடியோகான் நிறுவனத்துக்கு கடன் அளித்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இவ்வாண்டு தொடக்கத்தில் சந்தா கோச்சார்,  தீபக் கோச்சார் ஆகியோருக்கு சொந்தமான ரூ.78 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக, சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், கணவரின் சகோதரர் ராஜீவ் கோச்சார் ஆகியோரிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே பல முறை விசாரணை நடத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.