மன்னிப்புக் கேட்க மறுத்ததை பரிசீலிக்க பூஷணுக்கு அவகாசம்: உச்ச நீதிமன்றம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கேட்க மறுத்துக் கூறிய கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு இரண்டு நாள்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்புக் கேட்க மறுத்துக் கூறிய கருத்துகளை மறுபரிசீலனை செய்ய வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு இரண்டு நாள்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது வழக்குரைஞர்களுடன் கலந்தாலோசனை செய்து, உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்பது குறித்து முடிவு செய்வதாக பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் கூறியுள்ளார்.
வழக்குரைஞரும், சமூக ஆா்வலருமான பிரசாந்த் பூஷண் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளின் வாயிலாக நீதித்துறையை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அவா் மீதான குற்றத்தை உச்சநீதிமன்றம் கடந்த 14-ஆம் தேதி உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.
இதையும் படிக்கலாமே.. மன்னிப்புக் கேட்க மாட்டேன்: பிரசாந்த் பூஷண்
அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் பூஷணுக்கு, எந்த தண்டனையும் வழங்கப்படக் கூடாது என்று அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் வாதத்தை முன் வைத்தார்.
ஆனால், நீதித் துறையை அவமதித்து தான் இட்ட சுட்டுரைப் பதிவுகளுக்கு மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்ற தனது நிலைப்பாட்டை பிரசாந்த் பூஷண் மாற்றிக் கொள்ளாவிட்டால், வேணுகோபாலின் கோரிக்கையை பரிசீலனை செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிவிட்டனர்.
இதையும் படிக்கலாமே.. வேறு அமர்வில் விசாரணை இல்லை: உச்ச நீதிமன்றத்தில் பூஷண் மனு தள்ளுபடி
பிரசாந்த் பூஷணின் பேச்சு, தொணி, உள்ளர்த்தம் அனைத்தும் விவகாரத்தை இன்னும் மோசமாக்குகிறது. இது பாதுகாப்பதா அல்லது மோசமானதா என்றும் வேணுகோபாலிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒருவேளை தனது தவறை அவர் உணர்ந்தால், உச்ச நீதிமன்றம் அவருக்கு தாராளமாக கருணை காட்டும், அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.