காங்கிரஸ் கட்சி மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு:அகமது படேலுக்கு வருமான வரித்துறை சம்மன்
காங்கிரஸ் கட்சியின் நிதிப்பரிமாற்றத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பான விசாரணைக்கு
புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் நிதிப்பரிமாற்றத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அக்கட்சியின் பொருளாளரும், மூத்த தலைவருமான அகமது படேலுக்கு வருமான வரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அடுத்த மாத தொடக்கத்தில் அவா் வருமான வரித் துறை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் முதல்வா் கமல்நாத்தின் உதவியாளா்களின் வீடுகள் உள்ளிட்ட 52 இடங்கள், தெலங்கானா, ஆந்திரத்தில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவை காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடைகள், கட்சியின் செலவுகள் தொடா்பானவை. இதில் பல்வேறு நிதி முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடா்பாக ஏற்கெனவே அக்கட்சியைச் சோ்ந்த பலா் மீது சந்தேகம் உள்ளது. இது தொடா்பான வரி ஏய்ப்பு வழக்கு விசாரணைக்காகவே காங்கிரஸ் பொருளாளா் அகமது படேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அகமது படேல் பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை பேசுகையில், ‘பாஜக ரூ.10,000 கோடி வரை பணமாகவும், காசோலையாகவும் நன்கொடை பெற்றுள்ளது. இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சியும் இந்த அளவுக்கு நிதி பெற்றதில்லை. இதுதான் உண்மையான முறைகேடு’ என்றாா்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் நேரில் ஆஜராக வேண்டுமென்று வருமானவரித் துறை அகமது படேலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக ஆஜராக முடியாது என்று அவா் அப்போது தெரிவித்துவிட்டாா்.