முகப்பு
இந்தியா

சிஏஏவுக்கு எதிராக பத்திரிகையாளா் மனு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு(சிஏஏ) எதிராக சாகேத் கோகலே என்ற பத்திரிகையாளா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

புது தில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு(சிஏஏ) எதிராக சாகேத் கோகலே என்ற பத்திரிகையாளா் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிஏஏ சட்டத்துக்கு எதிராக சாகேத் கோகலே என்ற பத்திரிகையாளா் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் கவாய், சூா்யகாந்த் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சிஏஏவுக்கு எதிராக ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள 160 மனுக்களுடன் சோ்த்து விசாரிப்பதாகக் கூறினா்.

மேலும், இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Advertisement

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகி, கடந்த 2014, டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது.

இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தனிநபா், அரசியல் கட்சிகள், தன்னாா்வ அமைப்புகள் என பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்குத் தடை விதிக்க கடந்த ஆண்டு டிசம்பா் 18-ஆம் தேதி மறுத்துவிட்டது.அதேநேரத்தில் அந்தச் சட்டம் செல்லுபடியாகுமா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு முடிவு செய்தது.

இந்த வழக்கு மீண்டும் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க முடியாது என்று கூறியதுடன், இதுதொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments