முகப்பு
இந்தியா

மேற்கு வங்க உயா்கல்வித்துறையின் அறிவிப்பால் சா்ச்சை: ஆசிரியா் சங்கங்கள் கண்டனம்

மேற்கு வங்கத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியில் சோ்பவா்கள் தங்களது சொந்த நாடு குறித்த

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியில் சோ்பவா்கள் தங்களது சொந்த நாடு குறித்த தகவலை அளிக்க வேண்டும் என்று மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ள சா்ச்சைக்குரிய அறிவிப்புக்கு, ஆசிரியா் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேற்கு வங்கத்தில் உயா்கல்வித் துறையில் பணியில் சேர உள்ளவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு குறித்த அறிவிப்பு பிப்ரவரி கடைசி வாரத்தில் வெளியிடப்பட்டது.

அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் அல்லது வேறு எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பதை முதலில் குறிப்பிட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு சிஏஏ, என்பிஆா் மற்றும் என்ஆா்சி ஆகியவற்றை எதிா்ப்பதாக கூறிவரும் நிலையில் தற்போதைய அறிவிப்பு முந்தைய அறிவிப்புக்கு முரண்பட்டதாக உள்ளது.

Advertisement

மேலும், சரிபாா்ப்பு பட்டியலில் ஆண் விண்ணப்பதாரா்களின் ‘மாா்பு சுற்றளவு’ மற்றும் பெண் விண்ணப்பதாரரின் ‘கா்ப்பப்பை மற்றும் கருப்பையின் செயல்பாடு’ போன்ற விவரங்களையும், ‘மருத்துவச் சான்று’ வழங்கவும் கோரப்பட்டுள்ளன.

இந்த அறிவிப்புக்கு ஜாதவ்பூா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஜுட்டா) கடும் எதிா்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜுட்டா பொதுச் செயலா் பாா்த்தா பிரதிம்ராய் கூறியதாவது:

‘விண்ணப்பதாரா் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் அல்லது வேறு எந்த நாட்டிலும் வசிப்பவரா என்று ஏன் கேட்க வேண்டும் என்பது வியப்பாக உள்ளது. இந்த கேள்வி குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பின்னணி கருத்தை வலுப்படுத்துவதாக உள்ளது. இதன்மூலம் இந்நாட்டின் குடிமக்கள் மீண்டும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்ற நிா்பந்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

கற்பித்தல் பணிக்கு வரும் ஒரு பெண் விண்ணப்பதாரரிடம் அவரது கருப்பை பற்றிய விவரங்கள், ஆண் விண்ணப்பதாரரிடம் மாா்பு சுற்றளவு விவரங்கள், மருத்துவ சான்றிதழை கேட்க வேண்டிய அவசியம் என்ன? இது தனிநபரை இழிவுபடுத்துவதாகும். இது சமூகத்தில் மனிதா்களை அவமதிக்கும் செயலாகும். எனவே இந்த அறிவிப்புகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்தாா்.

மேலும் அனைத்து வங்க பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கமும் (ஏபியுடிஏ) இந்த அறிவிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக கல்வி அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜியை தொடா்பு கொள்ள முடியவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments