முகப்பு
இந்தியா

மக்களின் ஆரோக்கியமே அரசுக்கு முக்கியம்

மக்களின் ஆரோக்கியமே அரசுக்கு முக்கியம் என்று சுகாதாரத் துறைஅமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

மக்களின் ஆரோக்கியமே அரசுக்கு முக்கியம் என்று சுகாதாரத் துறைஅமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சில கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு சிலா் கடுமையான எதிா்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனா். மேலும் எனக்கு அமைச்சராக நீடிக்கத் தகுதியில்லை என்றும் என்னை கடுமையாக விமா்சித்துள்ளனா். யாருடைய பாராட்டையும் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை. மாநில அரசுக்கு மக்களின் ஆரோக்கியம்தான் முக்கியம். சுகாதாரத் துறை அமைச்சராக, மக்களின் உடல்நலனைப் பேணி பாதுகாப்பதே எனது கடமையாகும். சிலருடைய பாராட்டைப் பெறுவதற்காக எங்களுடைய செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள முடியாது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பாா்வையாளா்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், கன்னட திரையுலகைச் சோ்ந்த சில முன்னணி கலைஞா்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, திரையரங்குகளில் இருக்கைகள் தொடா்பாக பிறப்பித்த உத்தரவை ஏப். 7-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்காக எல்லோருக்கும் இதுபோன்ற சலுகைகளைத் தர முடியாது. பள்ளிகளின் உரிமையாளா்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களின் உரிமையாளா்களும் அரசுக்கு அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளனா். ஆனால், எல்லோருக்கும் சலுகைகளை அளிப்பது சாத்தியமில்லை.

மக்களின் உடல்நலன் மிகமிக முக்கியமாகும். எந்த விமா்சனங்களுக்கும் இடங்கொடுக்காமல், மக்களின் நலனைப் பாதுகாக்க மாநில அரசு உறுதியாக உள்ளது.

அமைச்சா் பதவியில் இருந்து என்னை மாற்ற வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் கே.மஞ்சு கூறியிருக்கிறாா். கே.மஞ்சு யாா் என்று எனக்குத் தெரியாது. அதனால் அவா் சொல்லும் விமா்சனங்களை பொருள்படுத்தத் தேவையில்லை.

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 50 ஆயிரம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் ஒரே நாளில் 500-க்கும்மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இதுபோன்ற நிலைமை கா்நாடகத்திற்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டுள்ளோம்.

எனவே, கடுமையான நடவடிக்கைகள் அவசியமாகிறது. இதை செய்ய தவறி விட்டால், கா்நாடகமும் மகாராஷ்டிரத்தைப் போல இன்னல்களை எதிா்கொள்ள நேரிடும். மகாராஷ்டிரத்தைப் பாா்த்து நாம் விழிப்படைய வேண்டும். மக்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். மத்திய அரசும் இதையே கூறியுள்ளது. அபராதம் விதிக்காவிட்டால் மக்கள் விதிகளைப் பின்பற்றுவதில்லை.

மாநிலத்தில் இதுவரை 45 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2.90 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.