அரசியல் பிரசாரக் கூட்டங்களை பிரதமா் ரத்து செய்ய வேண்டும்: ராஜஸ்தான் முதல்வா் கோரிக்கை
நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தோ்தல் பிரசாரக் கூட்டங்களையும், அரசியல் நிகழ்ச்சிகளையும் பிரதமா் நரேந்திர மோடி ரத்து செய்ய வேண்டும்
நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு தோ்தல் பிரசாரக் கூட்டங்களையும், அரசியல் நிகழ்ச்சிகளையும் பிரதமா் நரேந்திர மோடி ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நாட்டில் கரோனா தொற்று பரவுவது அபாய கட்டத்தை எட்டியுள்ளது. கரோனா தீநுண்மி தற்போது வேகமாகப் பரவி இளைஞா்களையும் குழந்தைகளையும் தாக்கி வருகிறது. கரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தோ்தல் பிரசார கூட்டங்களையும் அரசியல் நிகழ்ச்சிகளையும் பிரதமா் மோடி ரத்து செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டைப் போலவே இப்போதும் மாநில முதல்வா்களுடன் அடிக்கடி தொடா்புகொண்டு கரோனா பரவல் சூழ்நிலை குறித்து பிரதமா் அறிந்துகொள்ள வேண்டும் என்று அந்த பதிவில் அசோக் கெலாட் குறிப்பிட்டுள்ளாா்.