இந்தியா

பினராயி விஜயனின் 2.0 அரசின் 100 நாள்கள்: கொண்டாட ஒன்றுமில்லை

IANS

பினராயி விஜயன் தலைமையிலான அரசு கேரளத்தில் மீண்டும் ஆட்சியமைத்து இன்றுடன் 100 நாள்கள் நிறைவடையும் நிலையில், அதுபற்றி கொண்டாட ஒன்றுமில்லை என்கிறது தகவல்கள்.

கேரள மாநிலத்தின் முதல்வராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பினராயி விஜயன் கடந்த மே 20ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டாா். அவருடன் 20 அமைச்சா்களும் பதவியேற்றுக் கொண்டனா். திருவனந்தபுரத்தில் உள்ள சென்ட்ரல் ஸ்டேடியத்தில் எளிமையாக நடைபெற்ற விழாவில் பினராயி விஜயன், கேரள முதல்வராக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

காங்கிரஸ் கூட்டணியும் இடதுசாரி கூட்டணியும் மாறி மாறி ஆட்சி செய்த கேரளத்தில் இந்த முறை வரலாற்றை மாற்றி எழுதியவர் பினராயி விஜயன். கேரள அரசியலில் முதல் முறையாக, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார்.

பினராயி விஜயனின் 2.0 ஆட்சி, 100 நாள்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் நடக்கவில்லை என்கிறது தகவல்கள்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாட்டிலேயே முதல் கரோனா நோயாளி கேரளத்தில் கண்டறியப்பட்டபோது, கரோனா பேரிடரை பினராயி விஜயன் தலைமையிலான அரசு மிகச் சிறப்பாகக் கையாண்டது. அதுதான் கேரளத்தில் மீண்டும் பினராயி விஜயன் ஆட்சியமைக்க பேருதவியும் செய்தது.

ஆனால், கரோனா பேரிடர் இரண்டாம் அலையின்போது, அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாதது கடும் விமரிசனங்களை எழுப்பியது.

நாட்டில் தற்போதைய கரோனா நிலவரப்படி, ஒரு நாளில் பதிவாகும் புதிய கரோனா பாதிப்பில் 65 சதவீதம் கேரளத்தில்தான் பதிவாகிறது. அதுபோல, நாட்டிலேயே அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட மாநிலமாகவும் மாறியுள்ளது.

இதனால், காங்கிரஸ் மற்றும் பாஜகவினர், கடும் விமரிசனங்களை முன் வைத்துள்ளனர். கடந்த ஆண்டு கரோனா பேரிடரை கட்டுப்படுத்திய பாராட்டை அவர் ஏற்றுக் கொண்ட போது, தற்போது கட்டுப்படுத்த முடியாத தோல்வியையும் அவரே ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அது மட்டுமல்ல, கரோனா நிலவரத்தை நாள்தோறும் அறிவித்து வந்த பினராயி விஜயன், கடந்த ஜூலை 23 முதல் அந்த வேலையைத் தவிர்த்துவிட்டதும் கடும் விமரிசனத்தையே உருவாக்கியது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளையடுத்து, முறைகேடாக மரம் வெட்டிய விவகாரத்தில் ரூ.500 கோடி மோசடி நடந்ததாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எழுந்த புகார் மற்றும் அது தொடர்பாக அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளும், பினராயி விஜயன் அலுவலகம் மீதான மக்களின் பார்வையை மாற்றியுள்ளது என்றே கூறப்படுகிறது.

இவ்வளவுக்கும் இடையே, கேரள முதல்வர் பினராயி விஜயன் எப்போது செய்தியாளர்களை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம், அதற்காகவே எதிர்க்கட்சிகளும் காத்திருக்கின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

கண்ணூரில் உள்ள பினராயி என்னுமிடத்தில் கள் இறக்கும் தொழில் செய்து வந்த எளிய குடும்பத்தில் 1944-ஆம் ஆண்டில் முண்டயில் கோரன்- கல்யாணி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவா் பினராயி விஜயன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது கேரள மாணவா்கள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்தாா். அந்த அமைப்பின் மாநில செயலா், மாநிலத் தலைவா் என வளா்ந்த அவா், 1968-இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழுவில் உறுப்பினரானாா். முதல் முறையாக கூத்துப்பறம்பில் இருந்து எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், கட்சியிலும், இடதுசாரி கூட்டணி அரசிலும் பல்வேறு பதவிகளையும் பொறுப்புகளையும் வகித்து முதல்வராக உயா்ந்துள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT