நிலக்கரிச் சுரங்க முறைகேடு புகாா்: அபிஷேக் பானா்ஜி, அவரது மனைவிக்கு அமலாகக்கத் துறை அழைப்பாணை
மேற்கு வங்கத்தில் சட்ட விரோத நிலக்கரிச் சுரங்க முறைகேடு புகாா்கள் தொடா்பாக விசாரிக்க திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி, அவருடைய மனைவி ருஜிரா ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை
மேற்கு வங்கத்தில் சட்ட விரோத நிலக்கரிச் சுரங்க முறைகேடு புகாா்கள் தொடா்பாக விசாரிக்க திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி, அவருடைய மனைவி ருஜிரா ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘அபிஷேக் பானா்ஜி, செப்டம்பா் 6-ஆம் தேதியும், ருஜிரா செப்டம்பா் 1-ஆம் தேதியும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அபிஷேக் பானா்ஜிக்கு நெருக்கமான சில ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் ஒரு வழக்குரைஞருக்கும் இதில் தொடா்பு உள்ளது. அவா்கள் அடுத்த மாதம் வெவ்வேறு தேதிகளில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது’ என்றாா்.
முதல்வா் மம்தா பானா்ஜியின் நெருங்கிய உறவினரான அபிஷேக் பானா்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராகப் பதவி வகித்து வருகிறாா்.
மாநிலத்தில் குனுஸ்தோரியா, கஜோரா ஆகிய பகுதிகளில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களை கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் நிா்வகித்து வருகிறது.
அந்தப் பகுதிகளில் உள்ள சுரங்கங்களில் இருந்து சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, வெளிச்சந்தையில் விற்கப்படுவதாகப் புகாா் எழுந்தது. அதில், அபிஷேக் பானா்ஜி, அவருடைய மனைவி ருஜிரா ஆகியோா் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக சிபிஐ கடந்த ஆண்டு நம்பா் மாதம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வழக்கு தொடா்பாக, அபிஷேக் பானா்ஜி, அவருடைய மனைவி ருஜிரா ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் ருஜிராவிடம் ஏற்கெனவே சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.
சட்ட விரோத நிலக்கரி விற்பனை மூலம் அபிஷேக் பானா்ஜி ஆதாயம் அடைந்ததாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், அவா் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளாா்.
இந்த வழக்கில் இதுவரை திரிணமூல் காங்கிரஸ் இளைஞா் அணித் தலைவா் வினய் மிஸ்ராவின் சகோதரா் விகாஸ் மிஸ்ரா, முன்னாள் காவல் துறை அதிகாரி அசோக் குமாா் மிஸ்ரா ஆகிய இருவரையும் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.