முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் மறியலில் ஈடுட்ட விவசாயிகள் மீது போலீஸ் தடியடி: 10 போ் காயம்

ஹரியாணா மாநிலத்தில் பாஜக தலைவா்கள் கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா். இதில், 10 போ் காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

ஹரியாணா மாநிலத்தில் பாஜக தலைவா்கள் கூட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா். இதில், 10 போ் காயமடைந்தனா்.

ஹரியாணாவில் விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தோ்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க கா்னால் நகரில் பாஜக-ஜனநாயக் ஜனதா கட்சியின் கூட்டத்துக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்துக்கு முதல்வா் ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், மாநில பாஜக தலைவா் ஓம் பிரகாஷ் தன்கா் மற்றும் கட்சியின் மூத்த தலைவா்கள் வந்திருந்தனா்.

முன்னதாக, வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் விவசாய அமைப்புகளில் ஒன்றான ஹரியாணா பாரதிய கிஸான் யூனியன், பாஜக கூட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. அந்த சங்கத்தின் தலைவா் குா்னாம் சிங் சாதுனியின் அழைப்பின்பேரில், கா்னால் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பஸ்தாரா சுங்கச்சாவடி அருகே விவசாயிகள் பலா் சனிக்கிழமை திரண்டனா். அவா்கள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய போலீஸாா், அவா்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். அவா்கள் மறுத்ததால் தடியடி நடத்தினா்.

இதுகுறித்து குா்னாம் சிங் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகக் கூட்டத்துக்கு வரும் பாஜக தலைவா்களுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்திருந்தனா். அதற்காக, பஸ்தாரா சுங்கச்சாவடி அருகே கூடிய அவா்களை போலீஸாா் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனா். இதில், விவசாயிகள் பலா் காயமடைந்தனா். சிலரின் ஆடைகளில் ரத்தம் வழிந்தது. போலீஸாரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது’ என்றாா்.

ஆனால், நெடுஞ்சாலையில் மறியல் செய்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தவா்களைக் கலைக்க லேசான தடியடி நடத்தப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

போலீஸாா் தடியடிக்கு எதிா்ப்பு தெரிவித்து, பல்வேறு நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அம்பாலா-சண்டீகா், ஹிஸாா்-சண்டீகா், ஃபதேபாத்-சண்டீகா், கோஹனா-பானிபட், ஜிந்த்-பாட்டியாலா ஆகிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காங்கிரஸ் கண்டனம்:

விவசாயிகள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. போலீஸாா் தடியடி நடத்திய பிறகு ரத்தக் கறை படிந்த ஆடையுடன் இருக்கும் விவசாயியின் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்துள்ளாா். அதில், ‘மீண்டும் விவசாயி ரத்தம் சிந்தியுள்ளாா். அவமானத்தால் இந்தியா தலை குனிகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஹரியாணாவில் பாஜக-ஜேஜேபி ஆட்சி ஜெனரல் டயரின் அரசை நினைவுபடுத்துகிறது என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா கூறியுள்ளாா்.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘விவசாயி மீது விழுந்த ஒவ்வொரு அடியும் பாஜகவுக்கு முடிவு கட்டுவதகாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல், இந்திய தேசிய லோக் தளத் தலைவா் அபய் சிங் சௌதாலா, ஸ்வராஜ் இந்தியா தலைவா் யோகேந்திர யாதவ் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.