இந்தியா

யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக களமிறங்கிய முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் குண்டுக்கட்டாக கைது: விடியோ வெளியாகி பரபரப்பு

DIN

உத்தரப் பிரதேசத்தில் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் குண்டுக்கட்டாக கைது செய்யப்படும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச ஐபிஎஸ் அலுவலர் அமிதாப் தாகூருக்கு கடந்த மார்ச் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் கட்டாய ஓய்வு அளித்தது. பணியில் முறையாக செயல்படவில்லை என காரணம் சொல்லப்பட்டது. இதையடுத்து, 2022 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளதாக புதிய கட்சி குறித்து அறிவிப்பை அமிதாப் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி, அமிதாப் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார். லக்னோவில் உள்ள அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டு  குண்டுக்கட்டாக அவர் ஜீப்பில் ஏற்றப்படும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை சுற்றி மக்கள் கூடியிருப்பது போன்றும் கைதுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற காட்சிகள் விடியோவில் பதிவாகியுள்ளது. முதல் தகவல் அறிக்கையை காட்டும் வரை வரமாட்டேன் அவர் கூறுவதும் விடியோவில் பதிவாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், அமிதாப்புக்கு எதிரான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறையினர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு, சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியில் அகிலேஷ் யாதவ்  முதல்வராக பொறுப்பு வகிக்கும் போது, அமிதாப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முதல்வர் முலாயம் சிங் தன்னை மிரட்டுவதாக அவர் குற்றம்சாட்டிய நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர், இந்த பணியிடை நீக்க உத்தரவிற்கு தடைவிதிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி, உச்ச நீதிமன்ற வாயிலில் தனது ஆண் நண்பருடன் ஒரு பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சிகிச்சை பலனின்றி அவர் தில்லி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்பு பேஸ்புக் லைவில் வந்த அவர், அமிதாப் உள்பட காவல்துறையினர் பலர்  தன்னை வழக்கின் மூலம் துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார்.  பல அரசியல் தலைவர்களையும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். முன்னதாக, 2019ஆம் ஆண்டு, பகுஜன் சமாஜ் கட்சி எம்பி அதுல் ராய்  மீது அவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். இதற்கு மத்தியில்தான், அமிதாபுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. வரும் 2028ஆம் ஆண்டு, அவர் ஓய்வுபெறுவதாக இருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT