கோவாவில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ள நிலையில், ‘அந்த மாநிலத்தை கடவுள் காப்பாற்றட்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.
கோவாவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதைத் தொடா்ந்து, கிருஹலட்சுமி திட்டத்தின் கீழ் கோவாவில் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என்று திரிணமூல் காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளரும் எம்.பி.யுமான மஹுவா மொய்த்ரா சனிக்கிழமை அறிவித்தாா்.
இதை விமா்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் கோவா மாநில தோ்தல் பொறுப்பாளருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை பதிவுகளை இட்டுள்ளாா். அவா் கூறியிருப்பதாவது:
திரிணமூல் காங்கிரஸின் கணக்கு பொருளாதார நோபல் பரிசுக்கு உகந்ததாக உள்ளது. கோவாவில் 3.5 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ரூ5,000 வழங்கினால் மாதம் ரூ.175 கோடி செலவாகும். ஆண்டுக்கு ரூ.2,100 கோடி செலவாகும். கடந்த 2020 மாா்ச் மாத நிலவரப்படி, கோவாவின் கடன் நிலுவை ரூ.23,473 கோடியை ஒப்பிடும்போது, இது சிறிய தொகைதான். கோவாவை கடவுள் காப்பாற்றட்டும் அல்லது கடவுளை கோவா காப்பாற்றட்டும் என்று சிதம்பரம் கூறியுள்ளாா்.
இதையடுத்து, வாக்குறுதியளித்தபடி மக்களுக்கு உதவித்தொகை அளிக்க முடியும் என்று மஹுவா மொய்த்ரா பதிலளித்துள்ளாா். அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆண்டுக்கு ரூ.2,100 கோடி என்பது மாநிலத்தின் மொத்த பட்ஜெட்டில் 6-8 சதவீதம்தான். எனவே, இந்தத் தொகையை வழங்க முடியும். மாநிலத்தில் நல்ல நிலையில் இருந்த பொருளாதாரம், கரோனாவுக்குப் பிறகு பாதிப்படைந்துவிட்டது. அதை மீட்டெடுக்க மக்கள் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.
தற்போது பல்வேறு நிபந்தனைகளுடன் தகுதியுள்ள பெண்களுக்கு கோவா மாநில அரசு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கி வருகிறது.
கோவா சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.2,500-ஆக உயா்த்துவோம் எனவும், மேலும் பல பிரிவுப் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.