ஹைதராபாத்தில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் மாயம்
ஒமைக்ரான் அச்சம் எழுந்த பிறகு, ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய வெளிநாட்டுப் பயணிகளுக்கு இதுவரை நடத்தப்பட்ட ஒமைக்ரான் சோதனையில், மூன்று பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் அச்சம் எழுந்த பிறகு, ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய வெளிநாட்டுப் பயணிகளுக்கு இதுவரை நடத்தப்பட்ட ஒமைக்ரான் சோதனையில், மூன்று பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வந்த 3 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களது மாதிரிகளை சோதித்ததில், ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதில் கவலைதரும் தகவல் என்னவென்றால், ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட மூன்று பேரில், இரண்டு பேர், ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு, அபாயப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இல்லாத நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதுதான்.
ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட முதல் நபர்.. 24 வயதாகும் பெண். கென்யாவிலிருந்து வந்த பயணிகளை தோராயமாக சோதனை செய்ததில், இவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் தொடர்பிலிருந்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது நபர்.. 23 வயதாகும் சோமாலியாவைச் சேர்ந்தவர். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் தோராயமாக சோதனை செய்தில், இவருக்கு ஒமைக்ரான் உறுதியானது. ஆனால் இவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவரவில்லை.
மூன்றாவது நபர்.. 7 வயது குழந்தை. ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய இந்த குழந்தைக்கு ஆர்டிபிசிஆர் சோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியாகும் முன்பே, இந்தக் குழந்தை உள்ளூர் விமானத்தின் மூலம் மேற்கு வங்கம் சென்றுவிட்டது. இது குறித்து மேற்கு வங்க மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் தற்போது 2.5 ஆக உள்ளது. இது சில ஐரோப்பிய நாடுகளில் 1.5 நாள்களாக உள்ளன. எனவே, மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஜிஎஸ் ராவ் வலியுறுத்தியுள்ளார்.
நல்வாய்ப்பாக, நாட்டில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை. தெலங்கானாவில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட இரண்டு பேருமே வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.