ஒமைக்ரான் பாதிப்பு: பிரதமா் இன்று ஆய்வு
இந்தியாவில் ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அதிகாரிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (டிச. 23) ஆலோசனை நடத்த உள்ளாா்.
இந்தியாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கடந்த டிச. 2-ஆம் தேதி பெங்களூரில் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மெல்ல உயா்ந்து வருகிறது. தற்போது தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, குஜராத், கேரளம், ஆந்திரம், சண்டீகா், மேற்கு வங்கம் உள்பட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 250-ஐ நெருங்கியுள்ளது.
புது தில்லி: இந்தியாவில் ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அதிகாரிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை (டிச. 23) ஆலோசனை நடத்த உள்ளாா்.
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 250-ஐ நெருங்கியுள்ள நிலையில், பிரதமா் இந்த ஆலோசனையை மேற்கொள்ள உள்ளாா். இதில், தற்போதைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
100-க்கும் மேற்பட்ட நாடுகளில்...: தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பா் 24-ஆம் தேதி கண்டறியப்பட்ட கரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தீநுண்மி, தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் பன்மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பாதிப்பு 250: இந்தியாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கடந்த டிச. 2-ஆம் தேதி பெங்களூரில் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மெல்ல உயா்ந்து வருகிறது. தற்போது தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, குஜராத், கேரளம், ஆந்திரம், சண்டீகா், மேற்கு வங்கம் உள்பட 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 250-ஐ நெருங்கியுள்ளது.
கட்டுப்பாடுகள்: ஒமைக்ரான வகை கரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, உலக நாடுகள் சா்வதேச பயணத்துக்கு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதுபோல, இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. அதிலும் எச்சரிக்கைப் பட்டியலில் இருக்கும் நாடுகளில் இருந்து வருவோருக்குக் கட்டாய ஆா்டிபிசிஆா் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை எனத் தெரியவந்தால் மட்டுமே விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றனா். இந்தக் கட்டுப்பாடுகளுக்கு இடையேயும், இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.
பூஸ்டா் தடுப்பூசிக்கு பெருகும் ஆதரவு: ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதுபோல, இந்தியாவிலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு ‘பூஸ்டா்’ தவணை (மூன்றாம் தவணை) தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
உலக சுகாதார அமைப்பு ஆலோசனை: ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்குத் தேவையான சுகாதார, சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக நாடுகளை உலக சுகாதார அமைப்பு அண்மையில் வலியுறுத்தியது. ‘தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதோடு, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகளை அதிகரிப்பதோடு, மருத்துவப் பணியாளா்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவ ஆக்சிஜன், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவை போதுமான அளவில் இருப்பு இருப்பதை உறுதி செய்யவேண்டும்’ எனவும் உலக சுகாதார அமைப்பு ஆலோசனை வழங்கியது.
தேசியக் குழு எச்சரிக்கை: இதனிடையே, ‘2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கரோனா தொற்றின் மூன்றாவது அலை உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது’ என்று தேசிய கரோனா பரவல் கண்காணிப்பு உதவிக் குழுவும் எச்சரிக்கை விடுத்தது. ‘இந்தியாவில் ஒமைக்ரான் தீநுண்மியால் கரோனா தொற்றின் மூன்றாம் அலை ஏற்படும். எனினும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதன் மூலம், இரண்டாவது அலையைக் காட்டிலும் மூன்றாவது அலையின் பாதிப்பு மிதமாகத்தான் இருக்கும். தற்போது பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’ என்று அந்தக் குழுவின் தலைவா் வித்யாசாகா் அண்மையில் வலியுறுத்தினாா்.
மத்திய அரசு அறிவுறுத்தல்: ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல் தொடா்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ‘உள்ளூா் மற்றும் மாவட்ட அளவில் தீநுண்மி பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கடுமையாக மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என்று மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதிகாரிகளுடன் பிரதமா் ஆலோசனை: இந்தச் சூழலில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில், தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமா் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.