இந்தியா

தவறாக பயன்படுத்தப்பட்ட ஆதார்: தில்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்

DIN

ஆதார் எண்ணைப்  பயன்படுத்தி மோசடி நடைபெற்றதால், புது ஆதார் எண் வழங்கக்கோரிய தொழிலதிபரின் மனுவிற்கு பதிலளிக்க மத்திய அரசிற்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் ராஜன் அரோரா என்ற தொழிலதிபர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தன்னுடைய ஆதார் எண் தனது அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் ஐரோப்பாவைச் சேர்ந்த வாடிக்கையாளர் மூலம் ராஜன் அரோராவின் ஆதார் எண் சர்வதேச நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த நிறுவனங்கள் பார்படோஸ் என்ற நாட்டில் உள்ளதாக அவருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. ராஜன் அரோராவிற்கும் அந்த நிறுவனங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 

கடந்த மார்ச் 3 ஆம் தேதி இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில், தனது ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், தனக்கு புது ஆதார் எண் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவருக்கு முறையான பதில்கள் கிடைக்கவில்லை. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு சென்று இது குறித்து விவரம் கேட்டபோது, எந்த இந்திய குடிமகனுக்கும் புதிய ஆதார் எண் வழங்கப்படாது என்ற பதில் அவருக்கு கிடைத்திருக்கிறது.

வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்களில் தனது ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதால், ராஜன் அரோராவின் நிறுவன பொருட்களை வாங்க பிறர் தயங்குவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது வியாபாரம் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ரேகா பல்லி, வரும் செப்டம்பர் 9 இந்த விவகாரம் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT