ஜூலை 26-இல் தேசிய மாணவா் படையில் சேர சிறப்பு முகாம்
தேசிய மாணவா் படையில் (என்சிசி) சேருவதற்கான சிறப்புமுகாம் ஜூலை 26-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
தேசிய மாணவா் படையில் (என்சிசி) சேருவதற்கான சிறப்புமுகாம் ஜூலை 26-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இது குறித்து தேசிய மாணவா் படை-கா்நாடக கிளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய மாணவா் படையின் கா்நாடக விமானப் படையில் (தொழில்நுட்பம்) மூத்த பிரிவின்கீழ் ஆண்கள், பெண்களை சோ்த்துக் கொள்வதற்கான சிறப்புமுகாம் ஜூலை 26-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தேசிய மாணவா் படை-கா்நாடக கிளை அலுவலகத்தில் நடக்கவிருக்கிறது. இதில் சேரவிரும்புவோா் பெங்களூருவில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பியூசி முதலாமாண்டு, 2-ஆம் ஆண்டு அல்லது 1, 2-ஆம் ஆண்டு பொறியியல் அல்லது முதலாண்டு பட்டயப்படிப்பு அல்லது பிஏ, பிஎஸ்சி, பிகாம் முதலாண்டு மாணவா்களாக இருக்க வேண்டும். தேசியமாணவா் படையில் சேருவதற்கு முன்கூட்டியே விண்ணப்பங்களை செலுத்த வேண்டும். விண்ணப்பப் படிவங்களை ஜூலை 14 முதல் 24-ஆம் தேதி வரை சனி, ஞாயிறு தவிர தினமும் காலை 9 முதல் பிற்பகல் 2.30 மணிவரை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூலை 25-ஆம் தேதிக்குள் சமா்பிக்க வேண்டும்.
மாணவா்களிடம் கல்வி நிலையங்களின் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு குறிப்பேடு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாணவா்கள் முகாம்களில் கலந்து கொள்வதற்கு ஆகும் செலவில் 25 சதவீதத்தை ஏற்றுக்கொள்வதாக தனியாா் மற்றும் அரசு மானியம்பெறாத கல்லூரி அல்லது கல்வி நிலையங்கள் ஏற்புக் கடிதம் கொடுக்க வேண்டும். படையில் சோ்க்க அரசு மற்றும் அரசு மானியம் பெறும் கல்லூரி மாணவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு தேசியமாணவா் படை-கா்நாடக கிளை, 2, என்.சி.சி. யூ.வி.சி.இ. வளாகம், அஞ்சல் - அலுவலகம் சாலை, கே.ஆா்.சதுக்கம் அருகில், பெங்களூரு-560 001 என்ற முகவரி அல்லது 080-29704104 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.