முகப்பு
இந்தியா

கரோனாவுக்கு பயந்த குடும்பத்தினர்: 15 மாதங்களாக பூட்டிய வீட்டுக்குள்ளேயே இருந்த அதிசயம்

ஆந்திரத்தில் கரோனா அச்சம் காரணமாக 15 மாதங்களாக பூட்டிய வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

Updated On : 22 ஜூலை, 2021 at 4:26 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆந்திரத்தில் கரோனா அச்சம் காரணமாக 15 மாதங்களாக பூட்டிய வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினரை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கரோனா பல்வேறு தரப்பினர் மீது பல வகையில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ஆந்திரத்தில் கரோனா அச்சம் காரணமாக ஒரு குடும்பத்தினர் 15 மாதங்களாக தங்களை தாங்களே வீட்டுக்குள் பூட்டி கொண்டு இருந்துள்ளனர்.

ஆந்திரத்தில் கடலி கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர், அண்டை வீட்டில் கரோனா காரணமாக ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து,  வீட்டை பூட்டி கொண்டு 15 மாதங்களாக அங்கேயே இருந்துள்ளனர்.

Advertisement

அரசின் திட்டம் மூலம் அவர்களுக்கு வீடு ஒதுக்க தன்னார்வலர் ஒருவர் அவர்களின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதுதான், 15 மாதங்களாக பூட்டிய வீட்டில் அவர்கள் இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து கிராமத் தலைவருக்கும் மற்றவர்களுக்கும் தன்னார்வலர் தகவல் கொடுத்துள்ளார். பின்னர், காவல்துறையினர் அங்கு சென்று அவர்களை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து கிராமத்தலைவர் குருநாத் கூறுகையில், "செட்டுக்கல்லா பென்னி, அவரின் மனைவி, இரண்டு குழந்தைகள் ஆகியோர் கடலி கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். கரோனாவுக்கு பயந்து பூட்டிய வீட்டில் 15 மாதங்களாக இருந்துள்ளனர். வீடு பூட்டி கிடந்ததால் அங்கு சென்ற தன்னார்வலர்கள், ஆஷா பணியாளர்கள் பதில் கிடைக்காமல் திரும்பியுள்ளனர். சமீபத்தில்தான், குடும்பத்தினர் பூட்டிய வீட்டில் இருப்பதாகவும் அவரின் உடல்நிலை மோசமாக மாறியுள்ளதாகவும் உறவினர் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அவர்களின் வீட்டுக்கு விரைந்தோம். பின்னர், காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம். காவல் ஆய்வாளர் கிருஷ்ணமச்சாரி தலைமையில் குடும்பத்தினர் மீட்கப்பட்டுள்ளனர். அப்போது, அவர்களின் உடல்நிலை மோசமாக இருந்தது. முடி பெரிதாக வளர்ந்திருந்தது. பல நாட்களாக அவர்கள் குளிக்கவில்லை. அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.