முகப்பு
இந்தியா

கரோனாவுக்கு எதிராக துல்லிய தாக்குதல்: மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சமூகத்தின் தற்போதைய மிகப் பெரிய எதிரியான கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை துல்லிய தாக்குதலைப் போல இருக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:21 AM
பகிர்:


சமூகத்தின் தற்போதைய மிகப் பெரிய எதிரியான கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை துல்லிய தாக்குதலைப் போல இருக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வீடு வீடாகத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங்க அரசை அறிவுறுத்தக்கோரி இரண்டு வழக்கறிஞர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.

வீடு வீடாக தடுப்பூசி செலுத்துவது தற்போதைக்கு சாத்தியமில்லை, ஆனால், வீட்டின் அருகே தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் தொடங் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் திபன்கர் டட்டா மற்றும் ஜி.எஸ். குல்கர்னி கரோனாவுக்கு எதிரான நடவடிக்கை துல்லிய தாக்குதலைப் போல இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் மேலும் தெரிவித்தது:

"கரோனா வைரஸ் மிகப் பெரிய எதிரி. அதை நாம் வீழ்த்த வேண்டும். எதிரி சில பகுதிகளில் தங்கியுள்ளது. சிலரால் வெளியே வர முடியவில்லை. உங்களது (அரசு) போக்கு துல்லிய தாக்குதலைப் போல இருக்க வேண்டும். வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களிடம் வரும் வரை நீங்கள் எல்லையில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எதிரியின் கோட்டைக்குள் நுழையவில்லை.

மக்களின் நலன்களுக்காக அரசு முடிவெடுக்கிறது. ஆனால், தாமதப்படுத்துவதால் பல்வேறு உயிர்கள் பறிபோகின்றன. 

கேரளம், ஜம்மு காஷ்மீர், பிகார் மற்றும் ஒடிசா மற்றும் மகாராஷ்டிரத்தில் சில நகராட்சிகளில் வீடு வீடாகத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நடைமுறை ஏன் நாட்டின் மற்ற மாநிலங்களிலும் ஊக்குவிக்கக் கூடாது? வீடு வீடாகத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த விரும்பும் சில மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களது சுதந்திரத்தை மத்திய அரசு தடுக்கக் கூடாது.  

வடக்கு, தெற்கு, கிழக்கில் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் வீடு வீடாகத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளன. மேற்கு (மகாராஷ்டிரம், மும்பை மாநகராட்சி) மட்டும் எதற்காகக் காத்திருக்கிறது?

நாட்டில் நிலவும் சூழல்களைக் கருத்தில் கொண்டு வலுவான திட்டத்துடன் அரசு செயல்படும் என்று நம்புகிறோம். மூத்த குடிமக்கள் மட்டுமின்றி தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்டோரது உணர்களுக்கும் மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும்."

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.