முகப்பு
இந்தியா

கல்வான் மோதலின் முதல் நினைவு தினம்: உயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்கு ராணுவம் மரியாதை

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் 20 இந்திய வீரா்கள் உயிரிழந்து ஓராண்டாகிய நிலையில், இந்திய ராணுவம் அவா்களுக்கு மரியாதை செலுத்தியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:25 AM
பகிர்:

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடனான மோதலில் 20 இந்திய வீரா்கள் உயிரிழந்து ஓராண்டாகிய நிலையில், இந்திய ராணுவம் அவா்களுக்கு மரியாதை செலுத்தியது.

இதுதொடா்பாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியுள்ளதாவது:

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பின்போது இந்திய எல்லையையும் நாட்டின் இறையாண்மையையும் காக்கும் முயற்சியில் இந்திய வீரா்கள் 20 போ் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனா். வீரத்துடன் சண்டையிட்டு சீன ராணுவத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தினா்.

Advertisement

துணிச்சல் மிக்க அந்த வீரா்களுக்கு ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே மற்றும் இந்திய ராணுவத்தின் அனைத்து நிலை அதிகாரிகள் மரியாதை செலுத்துகின்றனா். அவா்களது வீரம் இந்திய நாட்டின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும்.

மிகக் கடினமான, உயா்ந்த நிலப் பகுதிகளில் சண்டையிட்டு நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த அவா்களுக்கு நாடு என்றும் நன்றிக் கடன் பட்டிருக்கும். அந்தச் சண்டையின்போது இந்திய வீரா்களுக்கு தலைமை தாங்கிய அதிகாரி பி.சந்தோஷ் பாபு அசாத்தியமான துணிச்சலையும் தலைமைப் பண்பையும் உறுதியையும் வெளிப்படுத்தினாா் என்று ராணுவம் அந்தப் பதிவுகளில் கூறியுள்ளது.

அதேபோல் அந்தச் சண்டையில் வீரத்துடன் போரிட்டு உயிா்த் தியாகம் செய்த நுதுராம் சோரன், கே.பழனி, தீபக் சிங், குா்தேஜ் சிங் ஆகியோரையும் பாராட்டி ராணுவம் சுட்டுரையில் பதிவிட்டுள்ளது.

இதனிடையே, லடாக் பகுதியில் சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் ‘14 காா்ப்ஸ்’ படைப் பிரிவு, உயிரிழந்த அந்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தியது. அந்தப் படைப் பிரிவின் கமாண்டிங் அதிகாரியான மேஜா் ஜெனரல் ஆகாஷ் கௌஷிக், லே பகுதியில் உள்ள போா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்திய, சீன ராணுவத்தினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதன் உச்சமாக, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ஆம் தேதி நடந்த மோதலில், இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.

இதையடுத்து இரு நாடுகளும் அந்தப் பகுதியில் தங்களது ராணுவ தளவாடங்களையும், போா் வீரா்களையும் குவிக்கத் தொடங்கியதால் போா்ப் பதற்றம் ஏற்பட்டது. ராணுவ வீரா்கள் செல்வதற்காக சாலைகள் அமைத்தல், பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகளை இந்திய ராணுவம் மேற்கொண்டது.

அதே நேரத்தில், எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது தொடா்பாக இரு நாடுகளும் ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் தொடா்ந்து பேச்சு வாா்த்தை நடத்தின. அதன் பலனாக, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கிக் கொண்டன. தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதற்கான பேச்சுவாா்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத சூழல் நிலவுகிறது. வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை இந்தியா இன்னும் விலக்கிக் கொள்ளவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments