முகப்பு
இந்தியா

நந்திகிராமில் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல்: தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகார்

நந்திகிராம், பக்வன்பூர் மற்றும் ஹரிபூர் ஆகிய இடங்களில் வாக்காளர்கள் மிரட்டப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறி திரிணமூல் காங்கிரஸ்  தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
முதல்வா் மம்தா பானா்ஜி
பகிர்:

நந்திகிராம், பக்வன்பூர் மற்றும் ஹரிபூர் ஆகிய இடங்களில் வாக்காளர்கள் மிரட்டப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறி திரிணமூல் காங்கிரஸ்  தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. 

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன் மற்றும் ககோலி கோஷ் தஸ்திதர் ஆகிய இருவரும் இன்று கொல்கத்தாவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் சென்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் கடிதம் அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரிணமூல் எம்.பி.க்கள் 'கிரிமினல் குற்றங்கள் புரிந்த பலர் நந்திகிராம், பக்வன்பூர் மற்றும் ஹரிபூர் ஆகிய இடங்களில் வசிக்கின்றனர். ஆனால் அவர்கள் இந்த தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் அங்குள்ள மக்களை துன்புறுத்துகிறார்கள். இதனால் மேற்குறிப்பிட்ட தொகுதி வாக்காளர்கள் பயப்படுகின்றனர். வாக்காளர்களின் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்' என்று கூறினர். 

பாஜக தலைவர் சுவேந்து அதிகாரிதான், அச்சுறுத்தல் செய்யும் நபர்களுக்கு அடைக்கலம் தருவதாகவும் தெரிவித்த அவர்கள், காவல்துறையினர் இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். 

மேற்குவங்கத்தில் நாளை(மார்ச் 27) முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலில் நந்திகிராமில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இங்கு திரிணமூல் கட்சி சார்பாக முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். 

சமீபத்தில் திரிணமூல் கட்சியிலிருந்து பாஜகவுக்குச் சென்ற சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

நந்திகிராமில் 50,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மம்தாவை தோற்கடிப்பேன் என்றும் சுவேந்து அதிகாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →