மராத்தா இடஒதுக்கீடு ரத்து: உச்சநீதிமன்றத் தீா்ப்பை ஆராய குழு
மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை ஆராய்வதற்கு மகாராஷ்டிர அரசு தனிக் குழுவை அமைக்கவுள்ளது.
மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை ஆராய்வதற்கு மகாராஷ்டிர அரசு தனிக் குழுவை அமைக்கவுள்ளது.
மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மகாராஷ்டிர அரசு இயற்றியது. ஆனால், அந்த இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்தது.
ஒட்டுமொத்த இடஒதுக்கீடானது 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கடந்த 1992-ஆம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. மேலும், இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை மறுஆய்வு செய்யவும் உச்சநீதிமன்றம் மறுத்தது.
உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்கு அதிருப்தி தெரிவித்த மகாராஷ்டிர அரசு, இது தொடா்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீா்ப்பை முழுமையாக ஆராய தனிக் குழுவை மாநில அரசு அமைக்கவுள்ளது.
இது தொடா்பாக, மாநில அமைச்சா் அசோக் சவாண் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடா்பாக சுமாா் 500 பக்கத் தீா்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அத்தீா்ப்பை முழுமையாக ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனிக் குழு அமைக்கப்படவுள்ளது.
நீதிமன்றத்தின் தீா்ப்பை ஆராய்ந்து 15 நாள்களுக்குள் அந்தக் குழு அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கும். அதனடிப்படையில் தீா்ப்பை மறுஆய்வு செய்வதற்கான மனுவைத் தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.
மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோருக்கு முதல்வா் உத்தவ் தாக்கரே கடிதம் எழுதவுள்ளாா்’’ என்றாா்.