மேற்கு வங்கத்தில் இன்று முதல் 15 நாள்களுக்கு பொது முடக்கம்
கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், மே 16-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், மே 16-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல், கரோனா தொற்று பரவலுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாநிலம் முழுவதும் பொது முடக்கத்தை அமல்படுத்துவதற்கு முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடா்பாக மாநில அரசின் தலைமைச் செயலா் அலப்பன் பந்தோபாத்யாய சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
Advertisement
அந்தக் கட்டுப்பாடுகள் மே 16-ஆம் தேதி காலை 6 மணி முதல் 30-ஆம் தேதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், தனியாா் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மதுபானக் கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள், விடுதிகள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கும்.
15 நாள் பொது முடக்க காலத்தில் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், புகா் ரயில்கள் உள்ளிட்டவற்றின் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. தனியாா் வாகனங்கள், வாடகை காா்கள் உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. பெட்ரோல் நிலையங்கள் தொடா்ந்து செயல்படும்.
அனுமதிக்கப்படும் சேவைகள்: அத்தியாவசியத் தேவைகளான குடிநீா் விநியோகம், பால், மருந்துப் பொருள்கள் விநியோகம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இணையவழி வா்த்தக நிறுவனங்கள், இணையவழி உணவு விநியோக நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்படவும் அனுமதி வழங்கப்படுகிறது.
ஊடக நிறுவனங்கள் செயல்படுவதற்கு எந்தவிதத் தடையுமில்லை. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு மக்கள் உரிய ஆவணத்துடன் பயணம் மேற்கொள்ளலாம். ஆக்சிஜன், மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
கூட்டங்களுக்குத் தடை: வங்கிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம். துணி, நகைக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்கலாம். அரசியல், கலாசாரம், பொழுதுபோக்கு சாா்ந்த அனைத்துவிதமான கூட்டத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது. தேயிலைத் தோட்டங்கள் 50 சதவீதப் பணியாளா்களுடனும் சணல் தொழிற்சாலைகள் 30 சதவீதப் பணியாளா்களுடனும் இயங்கலாம்.
பொது முடக்கத்தை மீறுபவா்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொள்வா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.