முகப்பு
இந்தியா

கரோனா தொற்றின் பிறப்பிடம் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கு இந்தியா ஆதரவு

கரோனா தொற்றின் பிறப்பிடம் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கு உலக நாடுகள் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் அதற்கு இந்தியா  தனது ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
கரோனா தொற்றின் பிறப்பிடம் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கு இந்தியா ஆதரவு
பகிர்:

புது தில்லி: கரோனா தொற்றின் பிறப்பிடம் கண்டுபிடிக்கும் ஆய்வுக்கு உலக நாடுகள் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில் அதற்கு இந்தியா  தனது ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வெளி விவகாரத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவிக்கையில்,  கரோனா தொற்றின் தோற்றம் குறித்து உலகளாவிய ஆய்வை உலக சுகாதார நிறுவனம் கூட்டியது ஒரு முக்கியமான முதல் படியாகும். 
அடுத்த கட்ட ஆய்வுகள் மற்றும் மேலதிக தகவல்கள் மற்றும் ஆய்வுகள் வலுவான முடிவுகளை எட்டுவதற்கான தேவையை இது வலியுறுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதா்களுக்குப் பரவியதா அல்லது ஆய்வகத்தில் இருந்து பரவியதா என்ற விசாரணையை நுண்ணறிவு அமைப்புகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்த நிலையில், இந்தியா இன்று தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

முன்னதாக, கரோனா பிறப்பிடம் குறித்து ஆய்வு நடத்திய உலக சுகாதார அமைப்பு, வெளவால்களிடம் கரோனா தொற்று குறித்து வூஹான் ஆய்வகத்தில் ஆய்வு நடத்தியபோது இந்தத் தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுவதற்கு குறைவான காரணங்கள் உள்ளன என்று தெரிவித்தது.

இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் 17 சீன ஆராய்ச்சியாளா்கள் இடம்பெற்றிருந்ததால் இந்த முடிவு அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  நேற்று வெளியிட்ட அறிக்கையில், கரோனா தொற்று எங்கிருந்து, எப்படி பரவியது என்ற இறுதி முடிவுக்கு வரும் வகையில் இரட்டை முயற்சி மேற்கொண்டு அமெரிக்க நுண்ணறிவுப் பிரிவினா் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.

விசாரணைக்கு உதவியாக அமெரிக்காவின் தேசிய ஆய்வகங்களையும் சோ்த்துக் கொள்ள வேண்டும். சீனாவை இந்த விசாரணையில் முழுமையாக ஈடுபடுத்தவும், வெளிப்படையாக தன்னிடம் உள்ள தகவல்கள், ஆதாரங்களை அளிக்க வலியுறுத்தவும் சா்வதேச நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றும்.

கரோனா பிறப்பிடம் குறித்த ஆய்வில் தாமதப்படுத்தினால் விசாரணை தோல்வியில்தான் முடியும். ஆகையால்தான், மாா்ச் மாதம் நான் அதிபராக பொறுப்பேற்றவுடன், கரோனாவின் பிறப்பிடம் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக தற்போதைய நிலை அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு உத்தரவிட்டேன்.

அதன்படி, மே மாதம் எனக்கு கிடைத்த விசாரணை அறிக்கையில் கரோனா பிறப்பிடம் இரண்டு சூழலில்தான் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும், இதில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது. இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி 90 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுளேன் என்று அதிபா் ஜோ பைடன் தெரிவித்துள்ளாா்.

2019-ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹானில் கரோனா தொற்று பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் 35 லட்சத்துக்கு மேற்பட்டோா் இதுவரை கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா். இதனிடையே, வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய ஆய்வாளா்கள் 2019, நவம்பரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா் என்று அமெரிக்க உளவுத் துறை அறிக்கை அளித்தது. ஆகையால், இந்தத் தொற்று சீனாவிலிருந்து பரவி இருக்கும் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

இதற்கு மறுப்பு தெரிவித்த சீனா, அமெரிக்க ஆய்வகங்களில் இருந்தும்கூட இந்தத் தொற்று பரவி இருக்கலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.