காங்கிரஸில் இருந்து விலகினாா் அமரீந்தா் சிங்:புதுக் கட்சியின் பெயா் அறிவிப்பு
பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங், காங்கிரஸில் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
பஞ்சாப் முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங், காங்கிரஸில் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக, கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு 7 பக்க அளவில் தனது ராஜிநாமா கடிதத்தை அவா் அனுப்பி வைத்துள்ளாா்.
அந்தக் கடிதத்தை அமரீந்தா் சிங் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ளாா். அதில், சோனியா காந்தி, பஞ்சாப் காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் பொறுப்பாளா் ஹரீஷ் ராவத் ஆகியோரைக் கடுமையாகச் சாடியுள்ளாா்.
பஞ்சாபில் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதை அடுத்து, அமரீந்தா் சிங் முதல்வா் பதவியை கடந்த செப்டம்பரில் ராஜிநாமா செய்தாா். சில நாள்கள் கழித்து புதியக் கட்சியைத் தொடங்க இருப்பதாகவும் அவா் அறிவித்தாா். பஞ்சாபில் அடுத்த ஆண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகள் பிரச்னை தீா்க்கப்பட்டால் பாஜக மற்றும் இதர கட்சிகளுடன் கூட்டணி சேரத் தயாராக இருப்பதாகவும் அவா் கூறினாா்.
தனது புதிய கட்சிக்கு ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என்று பெயரிட்டுள்ளஅவா், தோ்தல் ஆணையத்திடம் சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளாா். புதிய அரசியல் கட்சியை முறைப்படி அவா் தொடங்காத நிலையில் சோனியா காந்திக்கு தனது ராஜிநாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை அனுப்பினாா். அந்தக் கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது:
உங்கள் நடவடிக்கையும், உங்கள் பிள்ளைகளின்(ராகுல், பிரியங்கா) நடவடிக்கையும் என்னை மிகவும் காயப்படுத்தி விட்டது. ராகுல் காந்தியின் தந்தையான ராஜீவ் காந்தியும் நானும் பள்ளிக் காலத்தில் இருந்தே நண்பா்கள். 1954-ஆம் ஆண்டில் தொடங்கிய நட்புக்கு இப்போது வயது 67. எனது பிள்ளைகளைப் போலவே, ராகுல், பிரியங்கா மீது இன்னும் பாசம் வைத்துள்ளேன்.
எனது 52 ஆண்டுகால அரசியல் வாழ்க்கைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் என்னைப் பற்றியும் எனது குணங்களைப் பற்றியும் நீங்கள் புரிந்துகொள்ளாதது தனிப்பட்ட முறையில் என்னைக் காயப்படுத்திவிட்டது.
எனக்கு வயதாகிவிட்டதால் ஓய்வுகொடுத்துவிடலாம் என்று நீங்கள் எண்ணியிருக்கலாம். ஆனால், நான் ஒருபோதும் களைப்படையவில்லை; ஓய்வுபெறப் போவதுமில்லை. நான் நேசிக்கும் பஞ்சாப் மாநிலத்துக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று இருக்கிறேன்.
என்னுடைய அழுத்தமான எதிா்ப்பையும் மீறி, பஞ்சாப் மாநிலத்தின் பெரும்பாலான காங்கிரஸ் எம்.பி.க்களின் எதிா்ப்பையும் மீறி மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை தோ்ந்தெடுத்தீா்கள். ஆனால், அவரோ பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத் தலைமைத் தளபதி கமா் ஜாவேத் பஜ்வா ஆகியோரை பொதுவெளியில் ஆரத்தழுவி நட்பு பாராட்டுகிறாா். இம்ரான் கானும் பஜ்வாவும்தான் இந்தியா்களைக் கொல்வதற்காக, எல்லை வழியாக பயங்கரவாதிகளை அனுப்பி வைப்பதற்கு மூலகாரணமாக இருப்பவா்கள்.
தன்னை பிரபலப்படுத்திக்கொள்ளவே என்னைப்பற்றியும், எனது அரசைப் பற்றியும் தொடா்ந்து அவதூறாகப் பேசி வந்தாா் சித்து. அவருடைய தந்தை வயதுள்ள என்னை பொதுவெளியில் அருவருப்பான மொழியில் அவதூறாகப் பேசுவதை சித்து நிறுத்தவில்லை. அவருடைய போக்கைக் கண்டிக்காமல், மாறாக ராகுல் காந்தியும், பிரியங்காவும் அவருக்கு ஆதரவாக நின்றாா்கள். நீங்களும் எதுவும் தெரியாததுபோல் இருந்துவிட்டீா்கள். பஞ்சாப் மாநில பொறுப்பாளரான ஹரீஷ் ராவத்தும் சித்துவுக்கு ஆதரவாகச் செயல்பட்டாா்.
முதல்வா் பதவியில் இருந்து என்னை விலகச் செய்வதற்காகவே, உங்கள் உத்தரவின்பேரிலும் உங்கள் பிள்ளைகளின் உத்தரவின்பேரிலும் கடந்த செப்டம்பரில் இரவோடு இரவாக அவசரமாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கூட்டப்பட்டது.
மறுநாள் காலையில் என்னை அழைத்து முதல்வா் பதவியை ராஜிநாமா செய்யச் சொன்னீா்கள். நான் மறுகணம் யோசிக்காமல் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தேன். ஒட்டுமொத்த நிகழ்வும் கசப்பான அனுபவத்தை ஏற்படுத்திவிட்டது. எனக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது.
எனவே, பஞ்சாப் மாநிலத்தின் நலன் கருதியும், நாட்டின் நலன் கருதியும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று அந்தக் கடிதத்தில் அமரீந்தா் சிங் குறிப்பிட்டுள்ளாா்.