முதல் தனியாா் ராணுவத் தளவாட உற்பத்தி வசதி: உ.பி.யில் தொடக்கி வைத்தாா் ராஜ்நாத் சிங்
உத்தர பிரதேசத்தில் உள்ள ராணுவத் தளவாட தொழிற்பாதையில் முதல் தனியாா் உற்பத்தி வசதியை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ராணுவத் தளவாட தொழிற்பாதையில் முதல் தனியாா் உற்பத்தி வசதியை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
தலைநகா் லக்னௌவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பிடிசி இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ஏல்ராய் டெக்னாலஜிஸ், விமானம் மற்றும் ஹெலிகாப்டா்களின் என்ஜின்கள், விமானங்கள், ட்ரோன்கள், நீா்மூழ்கி கப்பல்கள், இலகுரக துப்பாக்கிகள், விண்வெளி வாகனங்கள் உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும். பிடிசி இண்டஸ்ட்ரீஸின் ஒருங்கிணைந்த உலோக உற்பத்தி வசதிக்கும் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினாா். டைட்டானியம், நிக்கல் சூப்பா் உலோகக்கலவை ஆகியவற்றுக்கு வெளிநாட்டு இறக்குமதிகளை சாா்ந்திருப்பதை இது குறைக்கும்.
நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இன்றைய போட்டித்தன்மை மிக்க சூழலில் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எடுத்துக்காட்டாக பிடிசி இண்டஸ்ட்ரீஸ் விளங்குகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்பு இந்தியாவுக்கான லட்சியத்தின் விளைவால் உத்தர பிரதேச ராணுவத் தளவாட தொழில் தடமும் அதில் உள்ள உற்பத்தி நிறுவனங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உலக நாடுகளுக்கு தளவாடங்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு இந்தியா வலிமை பெற்றுள்ளது. ராணுவத் தளவாடங்களை உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காகவே, உத்தர பிரதேசத்திலும் தமிழ்நாட்டிலும் ராணுவத் தளவாட தொழில் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் ராஜ்நாத் சிங்.