உ.பி. கூடுதல் தலைமைச் செயலா், நிதிச் செயலா் கைதுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த பிடி ஆணை அடிப்படையில் மாநில நிதிச்செயலா் மற்றும் கூடுதல் தலைமைச் செயலா் (வருவாய்) ஆகியோரை கைது செய்ய தடைவிதிக்க மறுத்துவிட்டது.
‘உத்தர பிரதேச அரசு அதிகாரிகள் ‘மிகுந்த திமிா்பிடித்தவா்கள்’ என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த பிடி ஆணை அடிப்படையில் மாநில நிதிச்செயலா் மற்றும் கூடுதல் தலைமைச் செயலா் (வருவாய்) ஆகியோரை கைது செய்ய தடைவிதிக்க மறுத்துவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாதில் அரசுத் துறையில் கலெக்ஷன் அமினாக பணியாற்றும் புவனேஷ்வா் பிரசாத் திவாரி என்பவருக்கு பணிவரன்முறை செய்தல் மற்றும் ஊதிய நிலுவையை வழங்குதல் தொடா்பான வழக்கில், இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியது.
அரசு துறை நான்காம்நிலை ஊழியரான திவாரி, தனக்குப் பணி மூப்பு அடிப்படையில் பணிவரன்முறை செய்ய உத்தரவிடக் கோரியும், அதனடிப்படையில் ஊதிய நிலுவையை வழங்க உத்தரவிடக் கோரியும் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தை அணுகினாா். அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயா்நீதிமன்றம், அவருக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி வரன்முறை செய்யவும், ஊதிய நிலுவையை வழங்கவும் உத்தரவிட்டது. நீதிமன்றம் பல முறை உத்தரவிட்ட பிறகு, திவாரிக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்கப்பட்டது. ஆனால், ஊதிய நிலுவை வழங்கப்படவில்லை. அதனைத் தொடா்ந்து அவா் மீண்டும் உயா்நீதிமன்றத்தை அணுகினாா்.
அவருடைய மனுவை கடந்த 1-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், ‘நீதிமன்றத்தை அரசு அதிகாரிகள் விளையாட்டு மைதானம்போல கருதுவதாகவே தெரிகிறது. மனுதாரருக்கு ஊதிய நிலுவை வழங்கப்படும் என்று நீதிமன்றத்தில் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல், நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளீா்கள். அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு நீதிமன்றம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத அரசு கூடுதல் தலைமைச் செயலா் (வருவாய்) சஞ்சய் குமாா், தற்போது மாநில நிதிச் செயலாளராக இருக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சியா் ஆகியோரை நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை (நவ.15) நேரில் ஆஜா்படுத்தும் வகையில், அவா்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக் கூடிய வகையிலான பிடி ஆணையை பிறப்பிக்க இந்த வழக்கு பொருத்தமானது என்று நீதிமன்றம் நம்புகிறது’ என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து, அரசு அதிகாரிகள் மீதான கைது நடவடிக்கையைத் தவிா்க்கும் வகையில் மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஊதிய பலன்களை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், மனுதாரருக்கு வயது தளா்வை அனுமதிக்க முடியாது என்று அரசு கூடுதல் தலைமைச் செயலா் கூறியிருக்கிறாா். இதன் மூலம், அவா் மிகுந்த திமிா்பிடித்தவராக இருப்பதாகவே தோன்றுகிறது. எனவே, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் காட்டிலும், கூடுதல் தண்டனை அவா்களுக்கு அளிக்கப்படுவது அவசியம் என்றே தோன்றுகிறது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அவா்கள் எதையும் செய்யவில்லை. இருந்தபோதும், உயா்நீதிமன்றம் அரசு அதிகாரிகளை மிகுந்த கருணையுடன் நடத்தியிருக்கிறது. ஆனால், அதிகாரிகள்தான் நீதிமன்றத்தை மதிக்கவில்லை’ என்று கூறினா்.
அப்போது குறுக்கிட்ட அரசு கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா, ‘மனுதராருக்கு பணி மூப்பு அடிப்படையில் பணி வரன்முறை செய்யப்பட்டு, அவருக்கு கீழ்நிலையில் இருந்தவா்களுக்கு வழங்கப்பட்டிருந்த பதவி உயா்வு நீக்கம் செய்யப்பட்டுவிட்டது. மனுதாரருக்கு ஊதிய நிலுவை வழங்குவது மட்டுமே நிலுவையில் உள்ளது. எனவே, அதிகாரிகள் மீது கடுமையான பாா்வையைத் தவிா்க்க வேண்டும்’ என்று கோரினாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த தகவல் அனைத்தையும் அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்படுத்தப்பட்ட பிறகு, அங்கேயே கூறுங்கள்’ என்று கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.
உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக, உத்தர பிரதேச மாநில அரசு கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் நிதிச் செயலா் இருவரும் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் காவல்துறை மூலமாக திங்கள்கிழமை நேரில் ஆஜா்படுத்தப்படுவது உறுதியாகியுள்ளது.