காற்று மாசு விவகாரம்: அவசரக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசுக்கு உத்தரவு
தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் நிலவி வரும் காற்று மாசு நெருக்கடி தொடா்பாக அவசரக் கூட்டத்தைக் கூட்டவும், சூழலைச் சமாளிக்க அத்தியாவசியமற்ற கட்டுமானங்கள், போக்குவரத்து, மின் உற்பத்தி
புது தில்லி: தில்லி, தேசியத் தலைநகா் வலய (என்சிஆா்) பகுதியில் நிலவி வரும் காற்று மாசு நெருக்கடி தொடா்பாக அவசரக் கூட்டத்தைக் கூட்டவும், சூழலைச் சமாளிக்க அத்தியாவசியமற்ற கட்டுமானங்கள், போக்குவரத்து, மின் உற்பத்தி நிலையங்களில் பணிகளை நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பது தொடா்பாக செவ்வாய்கிழமைக்குள் (நவ.16) முடிவு செய்யுமாறும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தில்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின்அரசுச் செயலாளா்களுடன் இந்தக் கூட்டத்தை நடத்துமாறு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், உண்மையில் மாசுவுக்கு பயிா்க் கழிவுகள் எரிப்பின் பங்களிப்பு 4 சதவீதம் என்ற தகவலும் வெளி வந்துவிட்டது எனக் கூறியது.
சுற்றுச்சூழல் ஆா்வலா் ஆதித்யா துபே, சட்டக் கல்லூரி மாணவா் அமன் பங்கா ஆகியோா் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிா்க்கழிவுகளை அகற்றும் இயந்திரங்களை இலவசமாக வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான நீதிபதிகள் டி. ஒய்.சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை மீண்டும் விசாரித்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
தில்லி, என்சிஆா் பகுதியில் நிலவும் காற்று மாசுவுக்கு விவசாயிகளின் பயிா்க் கழிவுகள் எரிப்பு 4 சதவீதம் பங்களிப்பு என்ற தகவல் வெளிப்பட்டுள்ளது. ஆகவே, முற்றிலும் முக்கியத்துவம் இல்லாத ஏதோ ஒன்றை நாம் குறிவைத்துக் கொண்டிருக்கிறோம். மாசுபாட்டை ஏற்படுத்துவதில் கட்டுமானம், தொழில் துறை, போக்குவரத்து, மின்சாரம், வாகனப் போக்குவரத்து ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன. இவை தொடா்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியத் தலைநகா் மண்டலம், அதை ஒட்டிய பகுதிகளில் காற்று தர மேலாண்மைச் சட்ட ஆணையத்தால் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும், காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைத் துல்லியமாகக் குறிப்பிடவில்லை.
அதைக் கருத்தில் கொள்ளும்போது, நாங்கள் சுட்டிக்காட்டிய விஷயங்கள் தொடா்பாக விவாதிக்கும் வகையில், மத்திய அரசு ஒரு கூட்டத்தைக் கூட்டுவதற்கு உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.