முகப்பு
இந்தியா

அதானி துறைமுகம் வழியாக ஹேராயின் கடத்தப்பட்டதற்கும் பிஎஸ்எஃப்புக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதற்கும் என்ன தொடர்பு?

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருள் கடத்தலை அதனுடம் தொடர்புப்படுத்தி காங்கிரஸ் விமரிசித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா (கோப்புப்படம்)
பகிர்:

பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை நீட்டித்ததற்கு காங்கிரஸ் மத்திய அரசின் மீது கடும் விமரிசனங்களை மேற்கொண்டுள்ளது. குஜராத்தில் அதானி நடத்தும் முந்த்ரா துறைமுகம் வழியாக ஹேராயின் கடத்தப்பட்ட சம்பவத்திலிருந்து திசை திருப்பவே எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் பொது செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா விமரிசித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பஞ்சாபிலும் பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்திலும் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, "

காலவரிசையை கொஞ்சம் பாருங்கள்:

2021ஆம் ஆண்டு, ஜூன் 9ஆம் தேதி, குஜராத் அதானி துறைமுகம் வழியே 25,000 கிலோ எடையுள்ள ஹேராயின் இந்திய வந்தது.

2021ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி, குஜராத் அதானி துறைமுகத்தில் 3,000 கிலோ ஹேராயின் சிக்கியது.

பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு 15 கிமீலிருந்து 50 கிமீ தொலைவுக்கு தன்னிச்சையாக அதிகரிக்கப்பட்டது.

கூட்டாட்சி தத்துவம் இறந்து போனது, சதிச் செயல் அம்பலப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லை பகுதியை பகிர்ந்துள்ள மூன்று மாநிலங்களுக்கு உட்பட்ட 50 கிமீ தொலைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் சோதனை செய்யவும் பறிமுதல் செய்யவும் எல்லை பாதுகாப்பு படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு நீட்டிக்கப்பட்டதற்கு சமீபத்தில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலே காரணம் என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், எல்லை பாதுகாப்பு படைக்கு அதிக அதிகாரம் வழங்கியிருப்பது மாநில சுயாட்சி குறித்த விவாதத்தை எழுப்பியுள்ள நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சரண்ஜீத் ட்விட்டர் பக்கத்தில், "சர்வதேச எல்லை பகுதிகளை கொண்ட மாநிலங்களுக்கு உட்பட்ட 50 கிமீ தொலைவுக்கு எல்லை பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியிருப்பது கூட்டாட்சி தத்துவத்தின் மீதான நேரடி தாக்குதல். அரசின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். பகுத்தறிவில்லாத இந்த முடிவை உடனயடியாக திரும்பபெற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கேட்டு கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

10 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்ட விரோத நடவடிக்கைகளை களையும் விதமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், இது நிர்வாகம் மற்றும் அரசியல் ரீதியான பிரச்னைகளை எழுப்பும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.