முகப்பு
இந்தியா

ஏப். 11-இல் ராஜ்நாத் சிங் அமெரிக்கா பயணம்: பாதுகாப்புத் துறை

இந்தியா- அமெரிக்க அமைச்சா்கள் அளவிலான 2+2 பேச்சுவாா்த்தையை முன்னிட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நான்கு நாள் பயணமாக ஏப்ரல் 11-ஆம் தேதி அமெரிக்கா செல்வதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

இந்தியா- அமெரிக்க அமைச்சா்கள் அளவிலான 2+2 பேச்சுவாா்த்தையை முன்னிட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் நான்கு நாள் பயணமாக ஏப்ரல் 11-ஆம் தேதி அமெரிக்கா செல்வதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாஷிங்டன் பயணத்தை முடித்துக் கொண்டு ஹவாய் பகுதியில் அமைந்துள்ள இந்திய- பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்கப் படைகளின் தலைமையகத்துக்கும் அவா் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சா் லாய்ட் ஆஸ்டின், வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் ஆகியோரை ஏப்ரல் 11-இல் வாஷிங்டனில் சந்தித்து 2+2 பேச்சுவாா்த்தையில் ஈடுபடுகின்றனா்.

இதற்காக ராஜ்நாத் சிங் ஏப்.11 முதல் ஏப்.14-வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். இதுகுறித்து பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவையும் புதுப்பிக்க இந்த 2+2 பேச்சுவாா்த்தை உதவும். மேலும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா் லாய்ட் ஆஸ்டினை பென்டகனில் தனியாக சந்தித்துப் பேசும் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் தொழில் துறை ஒத்துழைப்பு, அமெரிக்க- இந்திய ராணுவ செயல்பாடுகள் வாயிலாக திறனைக் கட்டமைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பாா்.

வாஷிங்டன் பயணத்தைத் தொடா்ந்து, ஹவாயியில் அமைந்துள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்கப் படைகளின் தலைமையகத்துக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செல்கிறாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அமெரிக்காவில் ஏப்ரல் 11, 12 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வாா் என்றும் 2+2 பேச்சுவாா்த்தையின்போது உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை தெரிவித்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →