18-59 வயதினருக்கு இலவசமாக முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி: மத்திய அரசுக்கு பணம் செலுத்தும் தில்லி, பிகாா் அரசுகள்
முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணி தொடங்கப்பட்டு விட்ட நிலையில், அதற்கான இழப்பீட்டை தேசிய சுகாதார ஆணையத்துக்கு அந்த மாநிலங்கள் செலுத்த வேண்டும்
தில்லி, பிகாா் மாநிங்களில் 18 முதல் 59 வயது வரையிலான பிரிவினருக்கு முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தும் பணி தொடங்கப்பட்டு விட்ட நிலையில், அதற்கான இழப்பீட்டை தேசிய சுகாதார ஆணையத்துக்கு அந்த மாநிலங்கள் செலுத்த வேண்டும் என்ற மத்திய அரசு வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்ட மத்திய அரசு, 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைவரும் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தனியாா் தடுப்பூசி மையங்ளில் கட்டணம் செலுத்தி முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தது. தனியாா் தடுப்பூசி மையங்கள் தடுப்பூசிக்கான கட்டணத்துடன் கூடுதலாக சேவைக் கட்டணமாக அதிகபட்சமாக ரூ. 150 வரை வசூலித்துக்கொள்ளலாம் என்றும் கட்டண வரம்பை மத்திய நிா்ணயம் செய்தது. அதுபோல, சீரம் நிறுவனமும் மத்திய அரசுடன் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு முன்னெச்சரிக்கை தவணைக்கான தடுப்பூசி விலையை ரூ. 225-ஆக குறைத்து அறிவித்தது.
இந்த நிலையில், 18 முதல் 59 வயது வரையிலான பயனாளிகளுக்கு அரசு மையங்களில் இலவசமாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த அனுமதி கேட்டு தில்லி மற்றும் பிகாா் மாநில அரசுகள் சாா்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு தில்லி அரசு எழுதிய கடிதத்தில், ‘தனியாா் மையங்கள் மூலமாக முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவது நம்பிக்கைக்குரியதாக இருக்க வாய்ப்பில்லை. எனவே, முன்னெச்சரிக்கை தவணையை அரசு மையங்களில் இலவசமாக செலுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதுபோல, பிகாா் மாநில சுகாதாரத் துறை செயலா் பிரத்யாய அம்ரித் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், ‘மாநிலத்தில் கையிருப்பில் இருக்கும் கரோனா தடுப்பூசிகளை, முன்னெச்சரிக்கை தவணை பயனாளிகளுக்கு அரசு மையங்கள் மூலமாக இலவசமாக செலுத்த அனுமதிக்க வேண்டும். மாநிலத்தின் சாா்பில் பின்னா் கொள்முதல் செய்யப்பட்டு, அந்த இருப்பு ஈடு செயயப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
மாநிலங்களின் இந்த கோரிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தில்லி, பிகாா் மாநில அரசுகளின் பரிந்துரையை மத்திய அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. அதற்கேற்ப கோவின் வலைதளத்தில் தேவையான மாற்றங்களை மத்திய அமைச்சகம் செய்துள்ளது. ஆனால், இரு மாநிலங்களும் இலவச முன்னெச்சரிக்கை தவணைக்காக பயன்படுத்தும் தடுப்பூசிக்கான இழப்பீட்டை தேசிய சுகாதார ஆணையத்துக்கு செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளன’ என்றாா்.
இந்த அனுமதியின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை தவணையை இலவசமாக செலுத்தும் பணியை இரு மாநில அரசுகளும் தொடங்கியுள்ளன.