முகப்பு
இந்தியா

மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

பணமோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக்கின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

பணமோசடி வழக்கில் மகாராஷ்டிர அமைச்சா் நவாப் மாலிக்கின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸைச் சோ்ந்தவருமான நவாப் மாலிக்கை சொத்து அபகரிப்பு வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இதில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகளுக்கும் தொடா்பிருப்பதாக அந்தத் துறையினா் குற்றஞ்சாட்டியுள்ளனா். இதுதொடா்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி மாதம் நவாப் மாலிக்கை அமலாக்கத் துறை கைது செய்தது. அதனைத்தொடா்ந்து பணமோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, அவா் நீதிமன்ற காவலில் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கில் இருந்து தன்னை உடனடியாக விடுவிக்கக் கோரி, மும்பை உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவுக்கு எதிராக அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் கூறி, மும்பை உயா்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட மறுத்த நீதிபதிகள், நவாப் மாலிக்கின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனா்.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு: நவாப் மாலிக்கின் நீதிமன்ற காவல் வியாழக்கிழமை நிறைவடைந்த நிலையில், மும்பையில் பணமோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அவா் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து அவரை மே 6- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →