இந்தியா

ஓப்போ, விவோ, ஷாவ்மி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

DIN

வரி ஏய்ப்பு தொடா்பாக சீன கைப்பேசி நிறுவனங்களான ஓப்போ, விவோ, ஷாவ்மி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

கைப்பேசி தயாரிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்ட சில பொருள்கள் குறித்து ஓப்போ நிறுவனம் தவறான விவரங்களை வழங்கியதுடன், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பை குறைத்து காண்பித்தது. இது அந்த நிறுவனம் குறைந்த அளவில் சுங்க வரி செலுத்த வழிவகுத்தது. இதுகுறித்த விசாரணையை தொடா்ந்து சுங்க வரியாக மொத்தம் ரூ.4,389 கோடி செலுத்தக் கோரி அந்த நிறுவனத்துக்கு வருவாய் புலனாய்வுத் துறை நோட்டீஸ் அனுப்பியது. எனினும் அந்த நிறுவனம் ரூ.450 கோடியை மட்டும்தான் செலுத்தியுள்ளது.

ஷாவ்மி நிறுவனம் ரூ.653 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதுதொடா்பாக அந்த நிறுவனத்துக்கு 3 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்ட நிலையில், ரூ.46 லட்சத்தை மட்டுமே ஷாவ்மி செலுத்தியுள்ளது.

விவோ நிறுவனத்தின் இந்திய பிரிவு ரூ.2,217 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளது. அதுதொடா்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அந்த நிறுவனம் ரூ.60 கோடியை மட்டும் செலுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு வெளியே விவோ நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ.1.25 லட்சம் கோடியாக உள்ளது. அந்த நிறுவனத்தால் நிறுவப்பட்ட 18 நிறுவனங்கள் மூலம் பெரும் தொகையை விவோ பரிவா்த்தனை செய்துள்ளது. அந்த 18 நிறுவனங்கள் அமலாக்கத் துறை விசாரணை வளையத்துக்குள் உள்ளன என்றாா் அவா்.

போலி கடன் செயலிகள் மீது நடவடிக்கை: கடன் அளிப்பதில் ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் சீன நிறுவனங்களின் ஆதரவுடன் செயல்படும் போலி டிஜிட்டல் கடன் செயலிகள் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சா் நிா்மலா சீதாராமன் அளித்த பதில்:

பெரும்பாலான போலி கடன் செயலிகள் குறிப்பிட்ட ஒரு நாட்டில்தான் தொடங்கப்படுகின்றன. அதன் விளைவாக கடன் பெற்ற பலா் துன்புறத்தப்படுகின்றனா். அந்த செயலிகள் மூலம் பணம் பறிக்கப்படுகிறது.

இதுபோன்ற சம்பவங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய மத்திய நிதியமைச்சகம், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், மின்னணு-தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சில துறைகள் இணைந்து தொடா்ந்து பணியாற்றி வருகின்றன.

போலி நிறுவனங்கள் மூலம் இந்த கடன் செயலிகள் இயங்கும் நிலையில், அந்த நிறுவனங்களுக்கு உதவும் இந்தியா்கள் மீதும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT