இந்தியா

ஜம்மு-காஷ்மீர் மாநிலக் கொடியை முகப்பு படமாக வைத்த மெகபூபா முஃப்தி

DIN

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார். 

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், நாட்டு மக்கள் அனைவரும் தேசியக் கொடியை தங்கள் சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் படங்களாக வைக்க பிரதமர் மோடி கோரியிருந்தார். மேலும் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தங்களின் வீடுகளில் ஆகஸ்ட் 13- 15 வரை ஆகிய 3 நாள்கள் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தின் முகப்புப் படத்தினை மாற்றி வருகின்றனர். இந்நிலையில் சுதந்திர நாளையொட்டி ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது சுட்டுரைப் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார்.

தனது படத்தை நீக்கிவிட்டு பிரதமர் மோடியும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மெகபூபா முஃப்தியின் தந்தையுமான முஃப்தி முகமது சையது ஆகியோருடன் இந்தியக் கொடி மற்றும் ஜம்மு-காஷ்மீர் கொடி இருக்கும் புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்துள்ளார். மேலும் அவர் தனது சுட்டுரைப் பதிவில், “கொடி என்பது மகிழ்ச்சி மற்றும் பெருமைக்குரிய விஷயம் என்பதால் எனது முகப்புப் படத்தை மாற்றியுள்ளேன்.

எங்களைப் பொறுத்தவரை எங்கள் மாநிலக் கொடியானது இந்தியக் கொடியுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அந்த பிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எங்களது கொடியை நீங்கள் பறித்திருக்கலாம், ஆனால் எங்கள் கூட்டு மனசாட்சியிலிருந்து அதை அழிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியதற்கு மெகபூபா முஃப்தி விமர்சனம் தெரிவித்துவரும் நிலையில் அவரின் இந்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது.

75ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT