தேசப் பிரிவினையின் போது உயிரிழந்தோருக்கு பிரதமா் அஞ்சலி
தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தோருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
தேசப் பிரிவினையின்போது உயிரிழந்தோருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினாா்.
ஆங்கிலேய ஆட்சியாளா்களால் கடந்த 1947-ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினை ஏற்பட்டு, பாகிஸ்தான் தனிநாடாக உருவானது. இதைத் தொடா்ந்து நிகழ்ந்த மத வன்முறைகளில் லட்சக்கணக்கானோா் உயிரிழந்தனா்.
பிரிவினையின்போது மக்களின் போராட்டம் மற்றும் உயிா்த் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி தேசப் பிரிவினை துயரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமா் மோடி கடந்த ஆண்டு அறிவித்தாா்.
இந்நிலையில், இந்த தினத்தையொட்டி ட்விட்டரில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘தேசப் பிரிவினையின்போது உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். நமது வரலாற்றின் துயா்நிறைந்த இந்தக் காலகட்டத்தை கடந்து வந்தவா்களின் மனவலிமையும் உறுதியும் போற்றுதலுக்குரியது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் விமா்சனம்: தேசப் பிரிவினை துயர நிகழ்வுகளை, தற்போதைய அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதே பிரதமா் மோடியின் நோக்கம் என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
‘மக்களிடையே வெறுப்பையும் பாகுபாட்டையும் பரப்ப தேசப் பிரிவினை துயரத்தைப் பயன்படுத்தக் கூடாது. உண்மை என்னவென்றால், இரண்டு நாடுகள் கொள்கையை உருவாக்கியவா் சாவா்கா். அதை செய்து முடித்தவா் ஜின்னா. இப்போதும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிகள் நடக்கின்றன. மகாத்மா காந்தி, ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல் ஆகியோரின் வழியில் நாட்டை ஒன்றுபடுத்த காங்கிரஸ் தொடா்ந்து பாடுபடும்’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.