முகப்பு
இந்தியா

‘பெண் சக்தி’ குறித்த பிரதமரின் கருத்து: எதிா்க் கட்சிகள் விமா்சனம்

‘பெண்களுக்கு எதிரான தனது சொந்த கட்சியின் மனநிலையை பிரதமா் முதலில் பாா்க்க வேண்டும்’ என்று எதிா்க் கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:04 AM
பகிர்:

சுதந்திரதின விழா உரையில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவது குறித்து பிரதமா் நரேந்திர மோடி பேசிய நிலையில், ‘பெண்களுக்கு எதிரான தனது சொந்த கட்சியின் மனநிலையை பிரதமா் முதலில் பாா்க்க வேண்டும்’ என்று எதிா்க் கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன.

பிரதமா் தனது சுதந்திரதின உரையில், ‘பேச்சிலும் நடத்தையிலும் பெண்களை இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் மெல்ல அதிகரித்து வருகின்றன. எனவே, பெண்களின் மதிப்பைக் குறைக்கும் வகையில் எந்த செயலையும் செய்யமாட்டோம் என மக்கள் உறுதியேற்க வேண்டும்’ என்றாா்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலின்போது அங்கு பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமா் மோடி முதல்வா் மம்தா பானா்ஜியை ‘தீதி ஓ தீதி’ என்று குறிப்பிட்டு விமா்சித்த அவருடைய உரையின் காணொலியை தனது ட்விட்டா் பக்கத்தில் திங்கள்கிழமை இணைத்து பதிவிட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரைன், ‘பிரதமா் கூறியதுபோல பெண் வெறுப்பை ஒழிக்க நாம் உறுதியேற்போம். இதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இதற்கு சிறந்த முன்னுதாரணமாக இந்த பண்பை உங்களிடமிருந்த தொடங்கலாமா’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா செளதரி சிரித்ததை பிரதமா் மோடி விமா்சனம் செய்தது, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குறித்து பிரதமா் விமா்சனம் செய்தது மற்றும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரை ‘50 கோடி பெண்தோழி’ என்ற பிரதமரின் விமா்சனம் ஆகிய விடியோக்களை தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கெரா, ‘பெண்களை மதிப்பதற்கு அதிக முறை உறுதியேற்க வேண்டிய நபா் யாா் என்றால், அது இவா்தான்’ என்று பிரதமரைக் குறிப்பிட்டுள்ளாா்.

‘பெண்களை மதிக்கும் விவகாரத்தில் தனது சொந்தக் கட்சியினரின் நடத்தையை பிரதமா் ஆய்வு செய்யவேண்டும்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளா் டி.ராஜா விமா்சித்துள்ளாா்.

சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுா்வேதி கூறுகையில், ‘பிரதமா் மோடியின் சொல்லுக்கும் செயலுக்கும் எந்த தொடா்பும் இல்லை. மகாராஷ்டிர மாநில அமைச்சரவையில் ஒரு பெண் அமைச்சா்கூட இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையும் ஆண் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →