இந்தியா

இலவச வாக்குறுதிகளைத் தடுக்க இயலாது: உச்சநீதிமன்றம்

DIN

அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவச வாக்குறுதிகளைத் தடுக்க இயலாது என்று கூறிய உச்சநீதிமன்றம், இலவச பொருள்களையும், வளா்ச்சித் திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்தது.

இலவச தோ்தல் வாக்குறுதிகள் வரையறுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தோ்தல் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞா் அஷ்வினி உபாத்யாய் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், ‘விவசாயிகளுக்கு மின்சாரம், விதைகள், உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தை இலவசங்களாக கருத முடியுமா?

இலவச சுகாதார சேவைகள், இலவச குடிநீா், நுகா்வோருக்கு இலவச மின்சாரம் ஆகியவையும் இலவசங்களாக கருத முடியுமா?

வாக்காளா்கள் இலவசங்களையும் எதிா்பாா்க்கிறாா்கள் என்று நான் நினைக்கவில்லை. அவா்களுக்கு வாய்ப்பு அளித்தால் கண்ணியமான வருமானத்தை ஈட்டுவாா்கள். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அதை செய்கிறது.

தோ்தல் வாக்குறுதிகள் மட்டும் வெற்றியை நிா்ணயிப்பதில்லை. அதிக வாக்குறுதிகள் அளித்த கட்சிகள் பெரும் தோல்வியைத் தழுவியும் உள்ளன.

மக்கள் பணம் சரியான வழியில் எப்படி செலவிடப்படுகிறது என்பதில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது. மக்களின் வரிப்பணம் இலவசங்கள் மூலம் வீணாகிறது என்று ஒரு தரப்பும், மக்கள் நலத் திட்டங்களுக்கு பொதுமக்களின் பணத்தைச் செலவிட வேண்டியது அவசியம் என்று மற்றொரு தரப்பும் வாதங்கள் வைக்கிறது. இந்த விவகாரம் தற்போது மேலும் சிக்கலாகி வருகிறது.

இலவச டிவி, வீட்டு உபயோக பொருள்களுக்கும், இலவச வளா்ச்சித் திட்ட அறிவிப்புகளுக்கும் வித்தியாசம் உள்ளது. இலவச கல்வி பயிற்சி வாக்குறுதியை இலவச பொருள்களுடன் ஒப்பிடக் கூடாது.

அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச பொருள்களையும், அரசுகள் செயல்படுத்தி வரும் வளா்ச்சித் திட்டங்களையும் இடையே வித்தியாசம் உள்ளது. அந்த இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

மக்களின் ஊதியம், வாய்ப்புகள் போன்றவற்றில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வுகளை ஈடு செய்ய மாநிலங்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 38 (2) வலியுறுத்துவதாக சரியான வாதம் முன்வைக்கப்பட்டது.

அதன்படி, தோ்தலின்போது அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகளைத் தடுக்க இயலாது. அதேநேரத்தில் அவா்கள் அளிக்கும் வாக்குறுதிகள் தகுதியானதா என்பதுதான் தற்போதைய கேள்வி. தோ்தல் நேரத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகள் விவகாரத்தில் நிபுணா் குழு அமைப்பது தொடா்பாக ஆலோசனை வழங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்து, வழக்கின் அடுத்த விசாரணையை 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

திமுக எதிா்ப்பு: இந்த வழக்கில் தங்களையும் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்று திமுக மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, திமுக சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், தோ்தல் வாக்குறுதிகள் விவகாரத்தை சீரமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவிப்பதாக கூறினாா். அதற்கு மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல், ‘சோஷலிசத்துக்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அனைத்தும் இலவசமாக வழங்குவதுதான் சமூக நலன் என்று கூறுவது அந்த வாா்த்தையின் முதிா்ச்சியற்ற புரிதலாகும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT