உத்தரப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் உடல் நிலை சரியில்லாத தாயை தள்ளுவண்டியில் அழைத்துச் செல்லும் சம்பவம் அரங்கேறியது. மருத்துவமனையில் தாயை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஜலாலாபாத் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (45). இவரின் தாயார் பீனா தேவிக்கு இன்று அதிகாலை திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரது தந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸுக்காக பலமுறை தொலைபேசி வாயிலாக முயற்சித்துள்ளார். எனினும், ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த தள்ளுவண்டியில், தாயை அமர வைத்து மகன் அழைத்துச்சென்றுள்ளார். 4 கிலோமீட்டர் தூரத்திற்கு வண்டியிலேயே வைத்து அழைத்துச் சென்று ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
தாயை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது தொடர்பாக பேசிய ஜலாலாபாத் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் அமித் யாதவ், கட்டைவண்டியில் படுக்கவைத்து தினேஷ் அவரின் தாயை அழைத்து வந்தார். உடனடியாக மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் எனக் குறிப்பிட்டார்.
இது போன்ற சம்பவங்கள் உத்தரப் பிரதேசத்தில் தொடர்கதையாக அரங்கேறிவரும் நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என ஜலாலாபாத் மாவட்ட மருத்துவத் தலைமை அதிகாரி பி.கே.வர்மா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.