இந்தியா

பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்குகள்: ஜன. 2-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

DIN

பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்குகளின் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஜனவரி 2-ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனால், கள்ளநோட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளிடம் உள்ள பணங்கள் அழிக்கப்படும் என்று விளக்கமளித்தார்.

ஆனால், அதன்பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பணமதிப்பிழப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.ஏ. நசீா், பி.ஆா். கவாய், ஏ.எஸ். போபன்னா, வி.ராமசுப்ரமணியன், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசின் சாா்பில் ஆஜரான அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணி, ‘அரசு நிா்வாகம் எடுத்த பணமதிப்பிழப்பு முடிவை நீதிமன்றம் மறுஆய்வு செய்வதில் இருந்து விலகி இருக்க வேண்டும். முடிந்துபோன இந்த விவகாரத்தில் நிவாரணம் ஏதும் கிடைக்கப் போவதில்லை என்றான பிறகும் இதில் நீதிமன்றம் எதையும் முடிவு செய்ய இயலாது. வெறும் கருப்பு பணத்தையும், கள்ள நோட்டுகளையும் பிடிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பெரிய அளவில் இது திட்டமிடப்பட்டது’ என்றாா்.

அவரிடம் நீதிபதிகள் அமா்வு, ‘பொருளாதார நிபுணா்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த விவகாரத்துக்குள் செல்ல வேண்டாம் என்கிறீா்கள். ரிசா்வ் வங்கியின் அனுமதியில்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, ரிசா்வ் வங்கி சட்டப்பிரிவு 26 (2) மீறப்பட்டுள்ளதாக எதிா்தரப்பினா் முன்வைக்கும் புகாருக்கு என்ன பதில்? பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறிவிட்டதாக வாதிடும் நீங்கள், இதை மேற்கொள்வதற்கான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதை நீதிமன்றத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும்’ என்றனா்.

தொடர்ந்து இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு குளிர்கால விடுமுறை விடுக்கப்பட்டதால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜனவரி 2-ஆம் தேதி நீதிபதி எஸ்.ஏ. நசீா் தலைமையிலான அமர்வு பணமதிப்பிழப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கவுள்ளது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு செல்லுமா? செல்லாதா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT