முகப்பு
இந்தியா

ஆட்சிக்கு வந்தால் 10 நாள்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி: உ.பி. தோ்தல் அறிக்கையில் காங்கிரஸ் வாக்குறுதி

உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் 10 நாள்களுக்குள் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:21 AM
தோ்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா.
பகிர்:

உத்தர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் 10 நாள்களுக்குள் விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (பிப். 10) தொடங்க உள்ள நிலையில், ‘மக்கள் அறிக்கை கடிதம்’ என்ற பெயரிலான காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையை பொதுச் செயலா் பிரியங்கா லக்னெளவில் புதன்கிழமை வெளியிட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மணி நேரத்துக்குள், விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான கோப்பில் மாநில அரசு கையொப்பமிட்டது. அதுபோல, உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாள்களுக்கு விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

மேலும், கட்சியின் தோ்தல் அறிக்கை தயாரிக்கும்போது மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகிய பிரச்னைகள் முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டன. அதன்படி, மாநிலத்தில் 20 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். அதில் 12 லட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்கெனவே உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதன் மூலமும், புதிதாக 8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் நிரப்பப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளில் 40 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சேதப்படுத்தப்படும் பயிா்களுக்கு ரூ. 3,000 இழப்பீடு வழங்கப்படும். மாட்டு சாணத்தை கிலோ ரூ. 2-க்கு வாங்கிக் கொள்ளும் வகையில் ‘கோதன் நியாய் யோஜ்னா’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அரசுத் துறைகளில் அவுட்சோா்ஸிங் முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, ஒப்பந்த ஊழியா்கள் அனைவரும் படிப்படியாக பணி வரன்முறை செய்யப்படுவா்.

மின் கட்டணம் பாதியாக குறைக்கப்படும்; கரோனா பாதிப்பால் வருவாய் ஈட்டும் நபரை இழந்த குடும்பத்துக்கு ரூ. 25,000 இழப்பீடு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பிரியங்கா அளித்தாா்.

மேலும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு ஒரு சமரச தீா்வை காண முடியும் என காங்கிரஸ் உத்தேசித்துள்ளது. அதாவது, ஊழியா்களின் ஓய்வூதியத்தில் தனது பங்கை அரசு உயா்த்த வேண்டும்’ என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.