இந்தியா

காதலர் தினத்தில் காதல் திருமணம்: வரலாறு படைக்குமா மாற்றுப்பாலின ஜோடி?

DIN


திருவனந்தபுரம்: திருநங்கை சியாமா பிரபா, திருநம்பி மனு கார்த்திகா காதல் ஜோடி, வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி, திருமண பந்தத்தில் இணைந்து, காதலர்களாக இருந்தவர்கள் காதல் தம்பதிகளாக புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்கள். 

இவர்களது திருமண வைபவம், இந்து முறைப்படி, இரு வீட்டார் முன்னிலையில் வரும் திங்கள்கிழமை நடைபெறவிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு இரு வீட்டாரின் ஆதரவும் கிடைத்துள்ளது. ஆனால், பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. இவர்களுக்கும் கூட இந்த கனவு அவ்வளவு எளிதில் வசப்படவில்லை. பல தடைகளைத் தாண்டித்தான் இந்த இணையர்கள் தங்களது காதலை திருமணம் வரை கொண்டு வந்திருக்கிறார்கள்.

அன்றைய நாளில், திருநங்கை, திருநம்பி என்ற அடையாளத்தோடு தங்களது திருமணத்தை பதிவு செய்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள் இந்த காதல் ஜோடி. இதற்கு முன்பும் கேரளத்தில் மூன்றாம் பாலினத்தவரின் திருமணங்கள் நடந்தேறியுள்ளன. ஆனால், பதிவு செய்யும் போது, ஆண், பெண் என்றுதான் பதிவு செய்யப்பட்டிருக்கும். முதல் முறையாக மூன்றாம் பாலினத்தவர் என்ற அடையாளத்தோடு திருமணம் செய்து கொள்ள விரும்பும் இந்த இணையர்கள், இதற்காக கேரள உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடவும் திட்டமிட்டுள்ளார்கள்.

கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்தவர் திருநம்பி மனுகார்த்திகா (31). திருவனந்தபுரத்தில் உள்ள பல்நோக்கு நிறுவனம் ஒன்றில் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரியாக இருக்கிறார். சியாமா பிரபா (31), கேரள அரசின், சமூக நலத்திட்டத் துறையின் மூன்றாம் பாலினத்தவர்களின் மேம்பாட்டுத் துறை திட்ட அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 

கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து, காதலிக்கப்பட்டு வரும் இணையர்கள், வரும் பிப்ரவரி 14ஆம் தேதி திருமண பந்தத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். இவர்களது திருமணம் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறுவது மட்டும் சிறப்பல்ல, இவர்கள் மூன்றாம் பாலினத்தவர் என்ற அடையாளத்தோடு திருமணம் செய்து கொள்ளப்போவதுதான் புதிய வரலாறு.

தங்களது காதல் குறித்து மனம் திறந்த மனு கார்த்திகா, வழக்கமான காதல் கதைகளைப் போலவோ திரைப்படங்களில் காட்டும் காதலைப் போலவே எங்கள் காதல் பிறக்கவில்லை. இது உயிரும் உயிரும் நேசிக்கும் காதல். மூன்றாம் பாலினத்தவர்களுக்காக பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து வந்தவர் சியாமா. அதுதான், அவர் மீது காதலை உண்டாக்கியது. மற்றவர்களை மிக நன்றாக புரிந்து கொள்வார். அவர் மாற்றுப்பாலினத்தவராக மாறிய பிறகும், அவரது குடும்பத்தை அதே அக்கறையுடன் பார்த்துக் கொள்கிறார். மாற்றுப் பாலினத்தவர் என்ற அடையாளத்துக்காக அவர் என்றுமே வெட்கப்பட்டது இல்லை. 

நானும் எனது வீட்டில் மூத்தவர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சியாமாவிடம் எனது காதலைச் சொன்னேன். ஆனால் ஓராண்டுக்கு முன்பு தான் அவர் என் காதலை ஏற்றுக் கொண்டார். சியாமா தற்போது பிஎச்.டி. பயில விண்ணப்பித்துள்ளார்.

இதுவரை ஆண், பெண் என்றுதான் திருமண பந்தம் பதிவு செய்யப்பட்டிருக்கும். முதல் முறையாக, மூன்றாம் பாலினத்தவர் என்ற அடையாளத்தோடு திருமணத்தை பதிவு செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். நினைத்தபடி அது கைகூடினால், இந்தியாவிலேயே மூன்றாம் பாலினத்தவர் என்ற அடையாளத்தோடு திருமண பந்தத்துக்குள் நுழையும் முதல் இணையர்கள் நாங்களாகத்தான் இருப்போம் என்கிறார் உற்சாகம் கொப்பளிக்க.

இந்த திருமணம் திட்டமிட்டபடி நடந்தேறினால், தங்களது அடையாளத்துக்காக போராடி வரும் மூன்றாம் பாலினத்தவர்கள், இனி திருமணத்தின் போதும் தங்களது அடையாளத்தை உரக்கச் சொல்லும் நாள் வரும் என்கிறார் மனு கார்த்திகா.

மனுவின் தாய் மட்டுமே, மனுவின் அனைத்து செயல்களுக்கும் ஆதரவளித்து, படித்து, கடின உழைப்பின் மூலம் பெரிய பதவியை வகித்துவிட்டால், இந்த சமுதாயம் எப்போதுமே நம்மை நிராகரிக்காது என்பதை வேத மந்திரமாக உச்சரித்து வந்தவர். 

இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டே, மூன்றாம் பாலினத்தவர் அமைப்பினர் மூலம் சந்தித்து, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள். இத்தனை நாளும், தங்களது குடும்பத்தாரின் ஒப்புதலுக்காவும், நிலையான வேலைக்காகவும் காத்திருந்து, இன்று திருமண பந்தத்தில் இணைய வண்ணக் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT