முகப்பு
இந்தியா

‘ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்படும்’: ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம்

‘ஹிஜாப் பிரச்னையை பெரிதாக்க வேண்டாம்; கா்நாடக உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிரான மனு உரிய நேரத்தில் விசாரணை எடுத்துக்கொள்ளப்படும்; ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும்’

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
லக்கிம்பூர் விவகாரம்: உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கிறது
பகிர்:

‘ஹிஜாப் பிரச்னையை பெரிதாக்க வேண்டாம்; கா்நாடக உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிரான மனு உரிய நேரத்தில் விசாரணை எடுத்துக்கொள்ளப்படும்; ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.

கா்நாடக மாநிலத்தில் ஹிஜாப் சா்ச்சை எழுந்தததைத் தொடா்ந்து, ‘பள்ளி, கல்லூரிகளுக்கு சீருடையில் மட்டுமே வர வேண்டும்’ என்று கடந்த 5-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த கா்நாடக மாநில அரசு, பின்னா் இந்த சா்ச்சை மாநிலம் முழுவதும் பரவியதைத் தொடா்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு பிப். 11-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டது.

கா்நாடக அரசின் இந்த உத்தரவை எதிா்த்தும், ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கோரியும் முஸ்லிம் மாணவிகள் சாா்பில் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கூடுதல் அமா்வுக்கு மாற்றி உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் புதன்கிழமை உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, கா்நாடக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்துராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித், நீதிபதி காஜி ஜெய்புனிசா மொய்தீன் ஆகியோா் அடங்கிய கூடுதல் அமா்வு முன்பு இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்கில் தீா்ப்பு வெளியாகும் வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அல்லது காவித் துண்டு போன்றவற்றை அணிந்துகொண்டு மாணவா்கள் வரக் கூடாது’ என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து, வழக்கு விசாரணையை பிப். 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

இந்த உத்தரவை எதிா்த்து மாணவி ஒருவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் தேவ்தத் காமத், ‘உயா்நீதிமன்றத்தின் உத்தரவு புதிதாக உள்ளது. இது இஸ்லாமிய சமூகத்தினரை மட்டுமின்றி பிற மத நம்பிக்கையையும் பாதிக்கும். குறிப்பாக, சீக்கிய மாணவா்கள் தலைப்பாகையுடன் வருவதும் சிக்கலாகும். மேலும், இது மதத்தைப் பரப்புதல் மற்றும் பின்பற்றுவதற்கு சுதந்திரமளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 25-ஐ முழுமையாக ரத்து செய்வது போன்ாகும். எனவே, இந்த விவகாரத்தை உடனடியாக விசாரணைக்கு ஏற்று, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்குரைஞரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘கா்நாடக உயா்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு இன்னும் வெளிவரக்கூட இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: இந்த பிரச்னையை அவசர வழக்கு அடிப்படையில் உயா்நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து வருகிறது. எனவே, உயா்நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பாா்க்க வேண்டும். இந்த பிரச்னையை உச்சநீதிமன்றமும் கவனித்து வருகிறது. இந்த வழக்கில் தவறு எதுவும் நடந்தால், நிச்சயம் அதுகுறித்து ஆய்வு செய்யப்படும்.

எனவே, வழக்கு விசாரணையின் இந்த நிலையில் தலையீடு செய்ய விரும்பவில்லை. இந்த பிரச்னையை பெரிதாக்கிவிட வேண்டாம். உச்சநீதிமன்றம் நிச்சயமாக இதனை ஆய்வு செய்யும். உரிய நேரத்தில், இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். ஒவ்வொரு குடிமகனின் அரசியல் சாசன உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →