நிகழாண்டு நீட் முதுநிலை மாணவா் சோ்க்கையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (இடபுள்யுஎஸ்) வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் விளக்கம் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதுதொடா்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவு நிகழாண்டு செல்லும் என்று உறுதிப்படுத்தினா்.
எனினும், இதுதொடா்பாக இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய அனுமதித்த நீதிபதிகள், மாா்ச் மூன்றாம் வாரம் அந்த மனு விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவா் வரூண் திலிப்பாய் பட் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அரவிந்த் தாதா், ‘பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு நிகழாண்டு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டு முறையே அடுத்த ஆண்டும் கடைப்பிடிக்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பினாா்.
மற்றொரு மாணவா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சாரு மாத்துா், ‘இந்தப் பிரிவில் ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள மாணவா்கள் தங்களின் மனுக்களில் திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.
இருவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘விண்ணப்ப மனுக்கள் மீது அதிகாரிகள் செயல்பாடுகளைத் தொடங்கி இருந்தால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள உத்தரவே தொடரும். மனுதாரா்கள் வேண்டுமென்றால் இடையீட்டு மனுவை தாக்கல் செய்யலாம். இந்த விவகாரம் தொடா்பான வழக்கு மாா்ச் மூன்றாம் வாரம் விசாரிக்கப்படும்’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.